"தமிழ்நாட்டு தோழர்கள்" : சாய் சுதர்சனையும், விஜய் சங்கரையும் பாராட்டிய அனில் கும்ப்ளே
இளம் வீரர் சாய் சுதர்சன் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட வீரராக செயல்பட்டு, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) நடந்த ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அனில் கும்ப்ளே கூறினார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் எனும் இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியில் 21 வயதே ஆன இளம் வீரர் சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் குறித்து அனில் கும்ப்ளே கூறியது என்ன?
சாய் சுதர்சனின் அபார செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியது பின்வருமாறு :- அவர் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வீரர் போல் இருந்தார். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக, ஸ்விங்கிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார். ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளியேறிய நிலையில் தமிழ்நாட்டு தோழர்கள் (விஜய் சங்கர் மற்றும் சாய் சுதர்சன்) இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். குஜராத் எப்போதுமே எதிரணியை 160க்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெறும் செயல்பாட்டைக் கொண்டது. இம்பாக்ட் பிளேயர் அவர்களுக்கு அதை இன்னும் எளிதாக்குகிறது. இதில் சாய் சுதர்சன் இன்னிங்ஸை கச்சிதமாக கட்டமைத்தார். இவ்வாறு அவர் கூறினார்.