சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ்: போராடி வீழ்ந்தார் இந்திய இளம் வீராங்கனை அனஹத் சிங்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் 18 வயது இளம் வீராங்கனை அனஹத் சிங் 1-3 என்ற கணக்கில் மலேசியாவின் முன்னணி வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் போராடித் தோல்வியடைந்தார். உலகின் 15-ஆம் நிலை வீராங்கனையும் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனுமான அனஹத் சிங், உலகின் நான்காம் நிலை வீராங்கனையான சிவசங்கரிக்கு எதிராக முதல் கேமை வசப்படுத்தி அபாரமாகத் தொடங்கினாலும், 37 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான போட்டியில் 11-5, 6-11, 4-11, 7-11 என்ற புள்ளிக் கணக்கில் இறுதியில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
பலப்பரீட்சை
மூன்றாவது முறையாக ஏமாற்றம்
அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்திலும் சிவசங்கரியிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த அனஹத் சிங்கிற்கு, இந்த ஆட்டமும் அதேபோன்று ஏமாற்றமளிக்கும் ஒன்றாக அமைந்தது.
சர்வதேசப் போட்டிகளில் சிவசங்கரியை எதிர்த்து அனஹத் சந்தித்த மூன்றாவது தோல்வி இதுவாகும்.
இருப்பினும், பிஎஸ்ஏ கோல்ட் (PSA Gold) அந்தஸ்து பெற்ற சர்வதேசத் தொடர் ஒன்றில் அரையிறுதி சுற்று வரை முன்னேறியதன் மூலம், கடந்த 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற பெருமையை அனஹத் சிங் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ஜோஷ்னா சின்னப்பா மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
அரையிறுதியில் தோல்வி
எகிப்து சாம்பியன்களை வீழ்த்திய வரலாறு
அரையிறுதியில் தோல்வியடைந்த போதிலும், இந்தத் தொடர் இளம் வீராங்கனை அனஹத் சிங்கின் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், 8 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற எகிப்தின் நூர் எல் ஷெர்பினியை நேர் செட்களில் வெறும் 30 நிமிடங்களில் வீழ்த்தி உலகையே அதிர வைத்தார்.
தொடர்ந்து காலிறுதியிலும் மற்றொரு எகிப்து வீராங்கனையான சல்மா ஹானியை 42 நிமிடங்கள் தீவிரமாகப் போராடி வீழ்த்தினார்.
போட்டிக்குப் பின் பேசிய சிவசங்கரி, "அனஹத் மிகச் சிறந்த திறமைசாலி, சர்வதேச அளவில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்து வருகிறார்" என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.