கங்குலியுடனான ஈகோ மோதல் தான் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க காரணம் : சேத்தன் சர்மா
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, பிசிசிஐ-கோலி மோதல் குறித்தும், சவுரவ் கங்குலியுடன் கோலியின் உறவு குறித்தும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு முழுமையாக கலைக்கப்பட்டது. எனினும், சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்குழு தலைவராக பிசிசிஐ'யால் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வுக் குழுவில் உள்ளவர்கள், பிசிசிஐ மற்றும் வீரர்கள் குறித்து ஊடகங்களுடன் பேசக்கூடாது என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதியாக உள்ளது. இருப்பினும், சேத்தன் சர்மா, ஜீ ஊடகத்தின் ஸ்டிங் ஆபரேஷனின் போது, பல பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி - விராட் கோலி மோதல் குறித்த முழு விபரம்
ஸ்டிங் வீடியோவில், சில வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டாலும், உடல் தகுதி இருப்பது போல் காட்டுவதற்காக ரகசிய ஊசி போட்டுக் கொள்வதாக பரபரப்புக் கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும், 2021ல் இந்திய டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய கோலியிடம், கேப்டன்சி பொறுப்பை தொடருமாறு அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் கோலி அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார். இதை கங்குலி ஊடக பேட்டி ஒன்றில் தெரிவித்த நிலையில், கோலி அதை மறுத்ததால், இருவருக்கும் இடையே ஈகோ மோதல் அதிகமாகியதாகவும், அதன் வெளிப்பாடாகவே அடுத்தடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சி பொறுப்புகளில் இருந்தும் கோலி நீக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.