BANvsIRE முதல் டி20 : அயர்லாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வங்கதேசம்
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் அயர்லாந்தை தோற்கடித்து, ஒயிட் பால் கிரிக்கெட்டில் தனது வலுவான செயல்திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. வங்கதேச கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டில் முழுமையான ஃபார்மில் இருப்பதோடு 50 ஓவர் வடிவத்தில் இந்தியாவையும், 20 ஓவர் வடிவத்தில் இங்கிலாந்தையும் தோற்கடித்துள்ளது. திங்கட்கிழமை (மார்ச் 27) சட்டோகிராமில் நடந்த டி20 போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 207 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸின்போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.
வங்கதேசம் vs அயர்லாந்து முதல் டி20 ஹைலைட்ஸ்
டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் (47 ரன்கள்) மற்றும் ரோனி தாலுக்தார் (67 ரன்கள்) சிறப்பான தொடக்கம் அமைத்த நிலையில், 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறிக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. மழை நின்றவுடன் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணிக்கு 8 ஓவரில் 104 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அயர்லாந்து அணியால் 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால், வங்கதேசம் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.