கிரிக்கெட்டில் சுவாரஸ்யம்; ஒரே அணிக்காக தந்தை மற்றும் மகனுடன் விளையாடிய கென்யா வீரர்
டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கென்யா அணிக்காக விளையாடிய காலின்ஸ் ஒபுயா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தந்தை மற்றும் மகனுடன் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, 2024 டி20 உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகளில் ஐசிசி தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 2024 டி20 உலகக்கோப்பை 20 அணிகள் பங்கேற்கும் மெகா போட்டியாக அமைய உள்ளது. இதில் பங்கேற்கும் 18 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களை உறுதி செய்வதற்கான ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நமீபியா, கென்யா, உகாண்டா, நைஜீரியா, ஜிம்பாப்வே, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஏழு அணிகள் இரண்டு இடங்களுக்காகப் போராடுகின்றன.
ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் அணிகளின் நிலவரம்
நமீபியா இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் மூன்று போட்டிகள் இருந்தாலும், முதல் இரண்டு இடங்களில் ஒன்றாக இடம் பெற்று தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது. எஞ்சிய ஆறு அணிகளும் இரண்டாவது இடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில் உள்ள நிலையில், இதில் விளையாடும் டெஸ்ட் அந்ததஸ்து பெற்ற ஒரே நாடான ஜிம்பாப்வே நமீபியா மற்றும் உகாண்டாவிடம் தோல்வியைத் தழுவி பின்தங்கியுள்ளது. இந்நிலையில், கென்யா இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் நிகர ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கென்யா அணியின் இந்த வெற்றிக்கு 42 வயதான காலின்ஸ் ஒபுயா முக்கிய காரணமாக உள்ளார்.
2003 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிய காலின்ஸ் ஒபுயா
காலின்ஸ் ஒபுயா நடப்பு தகுதிச் சுற்றில் இதுவரை மூன்று போட்டிகளில் 45.67 சராசரியில், 124.55 ஸ்ட்ரைக் ரேட்டில் தலா ஒன்பது சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளுடன் 137 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரையிலான போட்டியில் இரண்டாவது அதிக ரன் குவித்தவராகவும் உள்ளார். தற்போது 42 வயதான காலின்ஸ் ஒபுயா 2001இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் கென்யாவுக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 62 டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 2003 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய கென்யா அணியில் இடம் பெற்ற ஒபுயா, சுவாரஷ்யமாக அப்போது தன்னுடன் விளையாடிய ஆசிப் கரீமின் மகன் இர்பான் கரீமுடன் தற்போது ஒன்றாக விளையாடி வருகிறார்.