படிப்பு முக்கியம் பிகிலு; உயர்கல்விக்காக 24 வயதில் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய ஒலிம்பிக் வீராங்கனை
செய்தி முன்னோட்டம்
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் மகளிர் டேபிள் டென்னிஸ் அணி முதன்முறையாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்தது.
இறுதியில் இந்தியா காலிறுதியில் ஜெர்மனியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறினாலும், ஜெர்மனி அணிக்கு எதிரான காலிறுதியில் வெற்றி பெற்ற ஒரே இந்திய வீராங்கனையாக அர்ச்சனா காமத் மட்டுமே இருந்தார்.
இதன் மூலம், இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், அர்ச்சனா காமத் விளையாட்டுத் துறை ஆர்வலர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கத்திற்கு உத்தரவாதம் இல்லாததால், டேபிள் டென்னிஸை தொழில் ரீதியாக விட்டுவிட்டு வெளிநாட்டில் படிக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
படிப்பு
டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்ச்சனா காமத் முடிவின் பின்னணி
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய பிறகு, 24 வயதே ஆன அர்ச்சனா காமத், தனது பயிற்சியாளர் அன்ஷுல் கர்க்குடன் அடுத்த விளையாட்டுகளில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து உரையாடியுள்ளார்.
அப்போது அர்ச்சனாவின் நிலைப்பாட்டைக் கண்டு திகைத்துப் போன பயிற்சியாளர், பதக்கம் வெல்வது கடினம் என நேர்மையாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து வெளிநாட்டில் கல்வி பயிலும் முடிவை அர்ச்சனா காமத் முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளின் நிதி நிலைத்தன்மை கவலைக்குரியதாக உள்ளதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உபகரணங்கள் மற்றும் பயிற்சியின் அடிப்படையில் வீரர்களுக்கு ஆதரவு இருந்தாலும்,வீரர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான தளமாக இந்த விளையாட்டு மாறுவதில் இருந்து இன்னும் வெகு தொலைவில் இருப்பதாக தான் கருதுவதாக கர்க் தெரிவித்துள்ளார்.