1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் காஷ்மீரில் தொடக்கம்!!
நாடு முழுவதிலும் இருந்து 1,500 வீரர்கள் பங்கேற்கும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 10 முதல் 14ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த போட்டி முழுவதும் ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் எனும் பகுதியில் நடக்க உள்ளது. இதையொட்டி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குல்மார்க் சென்றுள்ளார். டாங்மார்க்கில் நடந்த பனி கிரிக்கெட் போட்டியிலும் அனுராக் தாக்கூர் பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர், "நாட்டின் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் 11 விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க இங்கு வந்துள்ளனர். நாட்டிலேயே இதுவரை நடந்த குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் மிகப்பெரிய நிகழ்வாக இது இருக்கும்." என்று கூறினார்.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள்
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் என்பது இந்தியாவின் தேசிய அளவில் திறமை வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் காணுவதற்காக தொடங்கப்பட்ட ஒன்றாகும். இந்த போட்டியில், பனிச்சறுக்கு, ஆல்பைன் பனிச்சறுக்கு, நோர்டிக் பனிச்சறுக்கு, ஸ்னோ ரக்பி, ஐஸ் ஸ்டாக் ஸ்போர்ட், ஸ்னோ பேஸ்பால், மலையேறுதல், ஸ்னோஷூ ஓட்டம், ஐஸ் ஹாக்கி, ஃபிகர் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்பீட் ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் வெற்றிக்கு பிறகு, 2020 இல் முதல் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகளை நடத்த முடிவு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் இதுவரை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.