மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 15 வயது டெல்லி சிறுவன் வந்தன் அலன்கார்; செஸ் உலகில் புதிய சாதனை
செய்தி முன்னோட்டம்
டெல்லியை சேர்ந்த 15 வயதான வந்தன் அலன்கார் சவாய் என்ற சிறுவன், Chess.com இணையதளம் நடத்திய டைட்டில்டு டியூஸ்டே பிளிட்ஸ் செஸ் போட்டியில் உலகின் முதன்மை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி மாபெரும் சாதனை படைத்துள்ளார். எவ்விதப் பயமும் இன்றி விளையாடிய இந்த 15 வயது சிறுவன், 50 நகர்த்தல்களின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தினார். இருப்பினும், இந்த மாபெரும் வெற்றியைப் பற்றி யாரிடமும் ஆரவாரம் செய்யாமல், அமைதியாகத் தனது ஆட்டத்தை முடித்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
மகனின் சாதனை
மறுநாளில் மகனின் சாதனையை அறிந்த தந்தை
போட்டி முடிந்து வந்தன் அமைதியாக தூங்க சென்றுவிட்ட நிலையில், அவரது தந்தையும் முன்னாள் வங்கி அதிகாரியுமான அலன்கார் சவாய் மறுநாள் Chess.com இணையதளத்தைப் பார்த்தபோதே இந்த சிறப்புமிக்க வெற்றியைக் கண்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்.
பெற்றோர் வற்புறுத்தியதாலேயே வந்தன் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளார்.
தனது மகனின் இந்த அபார வெற்றியைப் பற்றி பயிற்சியாளர் குர்பிரீத் பால் சிங்கிடம் தந்தை தெரிவித்த பிறகே, பயிற்சியாளருக்கும் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.
சாம்பியன் தோல்வி
50 நகர்த்தல்களில் வீழ்ந்த உலக சாம்பியன்
வெள்ளை காய்களுடன் களமிறங்கிய வந்தன், கார்ல்சனின் உலகத் தரவரிசை புள்ளி அழுத்தத்தைப் பற்றி யோசிக்காமல் தனது வழக்கமான பாணியில் 'Giuoco Piano' முறையில் காய்களை நகர்த்தியுள்ளார்.
ஆட்டத்தின் நடுவே கார்ல்சன் செய்த சிறிய தவறை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட வந்தன், எதிராளியின் காய்களை கைப்பற்றி ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.
இறுதியில் வேறு வழியின்றி 50வது நகர்த்தலில் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
வந்தன் அமைதியான சுபாவம் கொண்டவர் என அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கனவு
செஸ் மற்றும் எதிர்காலக் கனவுகள்
தனது தாயார் மூலம் சிறுவயதிலேயே செஸ் விளையாட்டைக் கற்றுக்கொண்ட வந்தன், வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராவார்.
இந்த வெற்றியைக் குறித்துப் பேசிய அவர், "இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் சுதந்திரமாக விளையாடினேன்" எனக் கூறியுள்ளார்.
செஸ் விளையாட்டை முழுநேரத் தொழிலாக மாற்றுவாரா என்பது உறுதியில்லை என்றாலும், சர்வதேச மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றுவதே இவரது உடனடி இலக்காகும்.
எதிர்காலத்தில் வரலாற்றுத் துறை அல்லது அரசியல் அறிவியல் துறையில் படிக்க விரும்புவதாகவும் இந்த டெல்லி சிறுவன் தெரிவித்துள்ளார்.