நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு துணை கேப்டன் பொறுப்பு
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) அறிவித்தது. அக்டோபர் 16-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பெற்ற இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் ஆகாஷ் தீப் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா துணை கேப்டன் அறிவிப்பின் பின்னணி
ஜஸ்ப்ரீத் பும்ரா, 2022இல் எட்ஜ்பாஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நவம்பரில் தொடங்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் எனக் கூறப்படும் நிலையில், பும்ராவின் துணைக் கேப்டன் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய அணி : ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
நான்கு பேர் ரிசர்வ் வீரர்களாக சேர்ப்பு
15 பேர் கொண்ட இந்திய அணியுடன், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக வைக்கப்பட்டுள்ளனர். அணியில் உள்ள வீரர்கள் காயம் காரணமாக விலக நேர்ந்தால் இவர்கள் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்படுவர். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் அக்டோபர் 16-21 அன்று பெங்களூரின் எம் சின்னசாமி ஸ்டேடியத்திலும், இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 24-28 அன்று புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது. மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி நவம்பர் 1-5 அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.