விரைவில் இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வரப்போகிறது புதிய யூ ட்யூப்
சமீபத்தில் நடைபெற்ற, 'Google for India' நிகழ்வில், பல்வேறு மொழிகளில், ஆடியோ டிராக்குகளை மாற்ற பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை, சோதனை செய்வதாக யூ ட்யூப் அறிவித்தது. இந்தியாவின் பல பிராந்திய மொழிகள் நிலவுவதால், யூ ட்யூப், அதன் வீடியோக்களை மேலும் தனிப்பயனாக்கப்பட்டதாக மாற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. "வீடியோ என்பது ஒரு தொழில்முறை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் புரியக்கூடிய வகையில், தகவலைப் பகிர்வதற்கான ஒரு பயனுள்ள வடிவமாகும். முக்கியமான, ஆரோக்கியமான தகவலை, ஜனநாயகமாக்க விரும்புகிறோம்". "மேலும், ஹெல்த்கேர் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், பல மொழி தகவல் பரிமாற்றம், பார்வையாளர்களை சென்றடைவதற்கும், உதவும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்," என்றது அந்நிறுவனம்.
பிராந்திய மொழிகளில் யூ ட்யூப்
தற்போது, இந்த அம்சம் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில், சில சுகாதார வீடியோக்களுக்கு மட்டுமே செயலில் உள்ளது. சம்மந்தப்பட்ட விடீயோவிற்கு இருக்கும் மொழிகளின் பட்டியலை 'settings '-இல் உள்ள "Audio track" மூலம் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், பன்மொழி ஆடியோவுடன் கூடிய வீடியோக்களைக் குறிக்கும் எந்த குறியீடும், தேடல் முடிவுகளில் தோன்றாது எனவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர, கூகுள் புதிதாக, 'அலவுட் (Aloud)' என்ற டப்பிங் செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது. ஏரியா 120 ஆக்சிலரேட்டரால் முதலில் தயாரிக்கப்பட்ட இந்த செயலி, படைப்பாளிகளுக்கு பல மொழிகளில், உள்ளடக்கத்தை படியெடுக்கவும், மொழிபெயர்க்கவும் மற்றும் டப்பிங் செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.