திடீரென முடங்கிய யூடியூப்! உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் தவிப்பு: என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி வீடியோ பகிர்வு தளமான யூடியூப், செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சேவை தடங்கல் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதிலும், பதிவேற்றுவதிலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்று காலை முதல் யூடியூப் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் தொழில்நுட்ப சிக்கல்கள் உணரப்பட்டன. வீடியோக்கள் லோட் ஆகாமல் இருப்பது, தளம் திறக்கப்படும்போது "Something went wrong" என்ற error செய்தி வருவது போன்ற புகார்களை பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, யூடியூப் டிவியும் (YouTube TV) சில கூகுள் சேவைகளும் இதனுடன் பாதிக்கப்பட்டன.
விளக்கம்
கூகுள் மற்றும் யூடியூப் விளக்கம்
இணையதள சேவைகளை கண்காணிக்கும் 'டவுன்டெடெக்டர்' தளத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 3,20,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் பாதிப்பை பதிவு செய்துள்ளனர். இந்தியாவில், 19,000-க்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இது உலகளாவிய அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப முடக்கம் என்பதை டவுன்டெடெக்டர் உறுதிப்படுத்தியது. இந்த முடக்கம் குறித்து யூடியூப் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "யூடியூப் சேவையைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். எங்கள் தொழில்நுட்பக் குழுவினர் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இந்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டு, அடுத்தகட்டத் தகவல்கள் வழங்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் எதனால் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பது குறித்த விரிவான காரணத்தைக் கூகுள் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை.