Loading...
உலகின் முதல் AI நேரலை மூளை அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளிக்கு பார்வை திரும்பியது
உலகின் முதல் AI மூளை அறுவை சிகிச்சை

உலகின் முதல் AI நேரலை மூளை அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளிக்கு பார்வை திரும்பியது

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2026
04:19 pm

செய்தி முன்னோட்டம்

லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உலகின் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் நேரலை வழிகாட்டுதலுடன் நோயாளி ஒருவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த 48 வயதான ரைஸ் ஹிபர்ட் என்பவருக்கு இந்த நவீனப் புரட்சிகர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளையில் இருந்த கட்டி நரம்புகளை அழுத்தியதால் அவர் தனது பார்வையை இழக்கும் அபாயத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வைக் குறைபாடு

பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி மற்றும் பார்வைக் குறைபாடு

பாதிக்கப்பட்ட நோயாளிக்கு மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் 11 மிமீ அளவிலான புற்றுநோய் அல்லாத கட்டி ஒன்று வளர்ந்து வந்தது.

இந்த சுரப்பி உடலுக்குத் தேவையான முக்கிய ஹார்மோன்களைச் சுரக்கும் பணியை செய்கிறது.

ஆனால், இக்கட்டி பார்வைக் நரம்புகள் மற்றும் மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் முக்கியத் தமனிகளுக்கு மிக அருகில் வளர்ந்ததால், அவருக்குத் தலைச்சுற்றல், தீவிர சோர்வு மற்றும் பார்வை மங்கலாகும் பிரச்சனைகள் ஏற்பட்டன.

இதையடுத்து அவருக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

சர்ஜிகல் சாட்ஜிபிடி

சர்ஜிகல் சாட்ஜிபிடி போல செயல்பட்ட ஏஐ தொழில்நுட்பம்

மூக்கின் வழியாக என்டோஸ்கோப் கேமராவை அனுப்பி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வழக்கமாக மூளையின் உட்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளைத் துல்லியமாகக் காண்பது கடினமாகும்.

ஆனால், இந்த ஏஐ கருவி நேரலை வீடியோவை ஆய்வு செய்து, முக்கியமான நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் இருக்கும் இடங்களைச் இரண்டாவது திரையில் தெளிவாக சுட்டிக்காட்டியது.

ஒரு அனுபவமிக்க இரண்டாவது மருத்துவரின் கண்களைப் போலச் செயல்பட்டு, கட்டியைப் பாதுகாப்பாக அகற்ற ஏஐ கருவி வழிகாட்டியது.

ADVERTISEMENT

நோயாளி மகிழ்ச்சி

'எனக்கு மீண்டும் ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது' - நோயாளி மகிழ்ச்சி

அறுவை சிகிச்சைக்குப் பிறகு பேசிய நோயாளி ரைஸ் ஹிபர்ட், "கண் விழித்துப் பார்த்தபோது எனது பார்வை தெளிவாகத் தெரிந்தது, எனக்கு மீண்டும் ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த ஏஐ தொழில்நுட்பம் மருத்துவர்களுக்கு உதவி மட்டுமே செய்யும் என்றும், முழுமையான கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நிபுணர்களிடமே இருக்கும் என்றும் மருத்துவக் குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

லண்டன் அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மருத்துவ உலகில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT