ஒருபோதும் கைகடிகாரங்களை அணியாத ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஏன்?
வாழ்வில் குறிப்பிட்ட இடத்தை அடைந்த தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எனப் பலரும் தங்களுக்கென சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை வைத்திருப்பார்கள். அவற்றுள் சில நம்மை சிந்திக்க வைக்கும், சில நம்மை ஆச்சரியப்படுத்தும், சில பழக்கவழக்கங்கள் நம்ம குழப்பும். அப்படி ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸிடமும் ஒரு பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைய நவீன ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியைத் தொடங்கி வைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் எப்போதும் கைகடிகாரம் அணிவதில்லையாம். பெரும்பாலான செல்வந்தர்கள் நேரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் வகையிலும், தங்களது அலங்காரத்தைப் பறைசாற்றும் பல்வேறு விதமான கைகடிகாரங்களை அணிவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால், உலகின் முன்னணி நிறுவனத்தை நிறுவியும், கைகடிகாரம் கட்டுவதை ஸ்டீவ் ஜாப்ஸ் எப்போதுமே விரும்பியதில்லையாம்.
கைகடிகாரங்களை ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பாததற்கு என்ன காரணம்?
தன்னுடைய இந்த முடிவுக்கு தத்துவார்த்தமான காரணம் ஒன்றைக் கொண்டிருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். கைகடிகாரங்களைத் தான் விரும்பாததற்கான காரணத்தை, தன்னுடைய மகள் லிசா பிரெண்ணென் ஜாப்ஸிடம் ஒரு சமயத்தில் பகிர்ந்து கொண்டிருந்திருக்கிறார் ஸ்டீவ். அந்த காரணத்தை தன்னுடைய 'ஸ்மால் ஃபிரை' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் லிடா பிரெண்ணென் ஜாப்ஸ். நேரத்தால் கட்டிப் போடப்படுவதை தான் விரும்பவில்லை. எப்போதும் நிகழ்காலத்திலேயே சுதந்திரமாக தான் வாழ விரும்புகிறேன் என கைகடிகாரத்தை விரும்பாததற்கான காரணம் குறித்து தெரிவித்திருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ். மேலும், கைகடிகாரங்களை விலக்கி வைத்தன் மூலமாக சுதந்திரத்திற்கும், படைப்பாற்றலுக்கும், தான் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.