ஆப்பிள் WWDC 2023: IOS 17 இயங்குதளம்.. எப்போது வெளியீடு?
ஆப்பிள் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த WWDC 2023 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பில் பார்க்கில் இந்த நிகழ்வு தொடங்கியது. வாட்ச், ஐபேடு ஆகியவற்றின் இயங்குதளங்களுக்கு மட்டுமான அப்டேட்களை மட்டும் கொடுத்துவிட்டு, அதன் முக்கியமான தயாரிப்பான ஐபோனின் இயங்குதளமான IOS-க்கு அப்டேட்களை கொடுக்காமல் இருக்குமா ஆப்பிள்? ஐபோனுக்கான அடுத்த இயங்குதளமான ஐஓஎஸ் 17 குறித்த அப்டேட்களை இந்த நிகழ்வில் வழங்கியிருக்கிறது ஆப்பிள். மேலும், டெவலப்பர்களுக்கான பீட்டா 1-ம் இன்று முதல் வெளியிடப்படுவதாக அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஐஓஎஸ் 17-ஐ தனிப்பட்ட பயன்பாட்டை மேலும் மேம்படுத்தும் விதமாக உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
IOS 17, வெளியீடு எப்போது?
தற்போது IOS 17-ன் ப்ரீவ்யூவை மட்டும் காட்டியிருக்கிறது ஆப்பிள். தற்போது டெவலப்பர்களுக்கா பீட்டா 1 வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்த மாதம் பொதுப்பயனர்களுக்கான பீட்டா வெர்ஷன் வெளியிடப்படலாம். அதனைத் தொடர்ந்து, டெவலப்பர்கள் மற்றும பொதுப்பயனர்களுக்கான பல்வேறு பீட்டா வெர்ஷன்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எப்போதும் செப்டம்பரில் தான் புதிய ஐஓஎஸ் இயங்குதளங்களை அந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு அதனையே கடைப்பிடித்து, வரும் செப்டம்பரில் புதிய ஐஓஎஸ் 17 இயங்குதளம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய ஐபோன் வெளியீட்டுடன் சேர்த்த இந்த இயங்குதளமும் வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.