ஆப்பிளின் WWDC 2023 நிகழ்வு.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்?
ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான WWDC 2023 இன்று தொடங்கவிருக்கிறது. கலிஃபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க்கில் இந்த நிகழ்வை நடத்தவிருக்கிறது ஆப்பிள். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் தங்களுடைய நிகழ்வுகளில் புதிய சாதனங்கள், மென்பொருட்கள் மற்றும் அப்டேட்களை ஆப்பிள் வழங்குவது வழக்கம். இன்று தொடங்கவிருக்கும் டெவலப்பர்கள் மாநாட்டில், ஐஓஎஸ் 17, ஐபேடு ஓஎஸ் 17, மேக்ஓஎஸ் 14, டிவிஓஎஸ் 17 மற்றும் வாட்ச்ஓஎஸ் 10 ஆகியவை குறித்த தகவல்களை அந்நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தங்களுடைய முதல் VR ஹெட்செட்டான ஆப்பிள் ரியாலிட்டி ப்ரோ ஹெட்செட், மேக்புக் மற்றும் மேக்புக் ப்ரோ ஆகியவற்றையும் இந்த நிகழ்வில் ஆப்பிள் வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எப்போது, எப்படி பார்ப்பது?
இந்த நிகழ்வு கலிஃபோர்னியாவின் ஆப்பிள் பார்க்கில் நடத்தப்பட்டாலும், உலகம் முழுவதும் உள்ள ஆப்பிள் ரசிகர்கள் இந்த நிகழ்வை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு WWDC 2023 நிகழ்வு தொடங்கவிருக்கிறது. இந்த நிகழ்வை ஆப்பிள் அதிகாரப்பூர்வ இணையப்பக்கம் முற்றும் யூடியூப் பக்கத்திலும் நேரலையில் பார்க்க முடியும். மேலும், மொபைலில் ஆப்பிள் டிவி செயலி மற்றும் ஆப்பிள் டெவலப்பர்கள் செயலியிலும் இந்த நிகழ்வு நேரலை செய்யப்படவிருக்கிறது. இன்று தொடங்கி ஜூன் 9-ம் தேதி வரை ஆப்பிளின் இந்த WWDC 2023 நிகழ்வு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.