புதிய வசதிகளை அறிமுகம் செய்யவிருக்கும் வாட்ஸ்அப்.. என்னென்ன வசதிகள்?
டெலிகிராமில் இருக்கும் சேனல் போன்ற வசதியை வாட்ஸ்அப்பிலும் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். தற்போது மேம்படுத்தப்பட்டு வரும் இந்த வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்தும் வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தற்போது ஸ்டேட்டஸ் இருக்கும் பகுதியை அப்டேட்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்து அந்த பகுதியிலேயே, புதிய சேனல் வசதி மற்றும் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை புதிதாக அந்நிறுவனம் கொண்டுவரவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் விரும்பும் சேனல்களில் இணைந்து அதன் மூலம் நமக்கான செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற முடியும். எனினும், அந்த சேனலில் இருக்கும் மற்றவர்களுக்கு நம்முடைய தொடர்பு எண் மறைக்கப்பட்டிருக்கும். சேனலின் பெயரைக் கொண்டே அதில் இணைந்து கொள்ளும் வகையில இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது வாட்ஸ்அப்.
கீப்-இன்-சாட் வசதி:
பயனர்களுக்கு மற்றொரு புதிய வசதியையும் தற்போது அறிமுகப்படுத்தி வருகிறது வாட்ஸ்அப். அதன்படி வாட்ஸ்அப்பில் மற்றவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை ஃபுக்மார்க் செய்து கொள்ள முடியும். 24 மணி நேரத்தில் குறுஞ்செய்திகள் அழியும் வசதி ஆன் செய்யப்பட்டிருந்தாலும், ஃபுக்மார்க் செய்யப்பட்ட குறுஞ்செய்திகள் அழியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறுஞ்செய்தி ஃபுக்மார்க் செய்யப்பட்டால், அதனை சம்பந்தப்பட்ட நபருக்கும் தெரியப்படுத்துகிறது வாட்ஸ்அப். அந்த நபரின் அனுமதி இருந்தால் மட்டுமே, அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை ஃபுக்மார்க் செய்து வைத்துக் கொள்ள முடியும். இந்தப் புதிய வசதியை தற்போது சில பயனர்களுக்கு அளித்திருக்கிறது வாட்ஸ்அப். இனி வரும் நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பயனர்களுக்கும் இந்தத் திட்டத்தை வெளியிடவிருக்கிறது.