டெக் அப்டேட்: விரைவில் வாட்ஸ்அப் செயலிக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் தனி தீம்
வாட்ஸ்அப் தனது செயலிக்கு என்று தனியாக தீம் ஒன்றைத் தேர்ந்தெடுக்க பயனர்களை அனுமதிக்கும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த தீம் ஃபோனின் தீம் அமைப்பிலிருந்து சுயாதீனமாக இருக்கும். இப்போது வரை, வாட்ஸ்அப் தீம் போனின் இயல்புநிலை தீமுடன் இணைந்து உள்ளது. மொபைல் போன் டார்க் தீமில் இருந்தால், செயலையும் டார்க் தீமில் இருக்கும். மேலும், மொபைலின் அமைப்பு லைட் தீமில் இருந்தால், வாட்ஸ்அப்பும் அதே தீமில் இயங்குகிறது. இந்நிலையில், வாட்ஸ்அப் வெளியிட உள்ள புதிய அம்சம், பயனர்கள் வாட்ஸ்அப் செயலிக்கு என தனிப்பயனாக்கப்பட்ட தீமை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பீட்டா சோதனையில் வாட்ஸ்அப் தீம் அப்டேட்
இந்த அம்சம் தற்போது பீட்டா சோதனையில் சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஆண்ட்ராய்டு 2.24.18.6 அப்டேட்டிற்கான வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாகும். இந்த அம்சம் அனைவருக்கும் எப்போது கிடைக்கும் என்பதற்கான காலக்கெடு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப்பை இயக்கும் பயனர்கள் இப்போது அமைப்புகளில் அம்சத்தைப் பார்க்க முடியும். இந்த புதிய தனிப்பயனாக்குதல் விருப்பங்கள் ஏற்கனவே பல்வேறு தனிப்பயனாக்க அம்சங்களை வழங்கும் டெலிகிராம் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக வாட்ஸ்அப்பை சந்தையில் நிலைநிறுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. செயலியின் தோற்றத்தின் மீது பயனர்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குவதன் மூலம், தனிப்பயனாக்கப்பட்ட செய்தியிடல் அனுபவத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களை கவர்ந்து தக்கவைத்துக்கொள்வதை வாட்ஸ்அப் நோக்கமாகக் கொண்டுள்ளது.