இனி ஒரே சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்தலாம், வாட்ஸ்அப்பின் புதிய வசதி
வாட்ஸ்அப்பில் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு புதிய வசதிகளை பீட்டா பயாளர்கள் மூலம் சோதனை செய்தும், சில வசதிகளை தற்போது பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியும் வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் வசதிகளில், ஒரே சாதனத்தில் பல வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பயனர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கின்றனர். தற்போது 'ஆண்ட்ராய்டு 2.23.18.21' பீட்டா வெர்ஷன் மூலமாக, பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் இந்தப் புதிய வசதி சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இதனை பொதுப் பயனாளர்களின் பயன்பாட்டிற்கு அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதியின் மூலம் ஒரே சாதனத்தில் நான்கு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடிகிற வகையில் வடிவமைத்திருக்கிறது மெட்டா.
வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் பிற வசதிகள்:
மேற்கூறிய வசதியைத் தவிர, ஒரே வாட்ஸ்அப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வசதியையும் விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம். இதனை மெட்டாவின் சிஇஓவான மார்க் ஸூக்கர்பெர்க்கும் உறுதி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், புதிதாக Disappearing Mode என்ற வசதியையும் வாட்ஸ்அப்பில் விரைவில் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது மெட்டா. இவற்றைத் தவிர்த்து, அழைப்புகளின் போது IP முகவரியை பாதுகாப்பாக மறைக்கும் வசதி, மேலே வெள்ளைப் பட்டையுடன் புதிய வாட்ஸ்அப் முகப்பு வடிவம், மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு வெரிஃபை செய்யும் வசதி மற்றும் புதிய குழு உறுப்பினர்களுக்கு சாட் ஹிஸ்டரியைப் பகிரும் வசதி ஆகிய வசதிகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப்.