லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான ரகசியக் குறியீட்டு வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பில் சாட்களை லாக் செய்து கொள்ளக்கூடிய வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். இதன் மூலம் நாம் ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பக்கூடிய சாட்களை மட்டும் வாட்ஸ்அப் செயலிக்குள் லாக் செய்து கொள்ள முடியும். அதற்கென தனி கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அந்த சாட்களை அன்லாக் செய்து நாம் குறுஞ்செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடிகிற வகையில், அந்த வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப். அந்த லாக் செய்யப்பட்ட சாட்களை ரகசியக் குறியீடு மூலம் கண்டறியும் வகையில் புதிய வசதி ஒன்றை கடந்த மாதம் வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வந்த நிலையில், தற்போது அந்த வசதியானது பீட்டா சோதனையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான ரகசியக் குறியீடு:
2.23.24.20 என்ற புதிய பீட்டா வெர்ஷனில் சோதனைக்காக ரகசியக் குறியீடு வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப். முன்பு லாக் செய்யப்பட்ட சாட்களானது நம்முடைய சாட் லிஸ்டிலேயே தனி ஃபோல்ராகக் காட்டப்பட்டு வந்தது. ஆனால், தற்போது புதிய வசதியில் நாம் குறிப்பிட்ட சில சாட்களை லாக் செய்திருக்கிறோம் எனத் தெரியாத வகையில் அதனை மறைத்திருக்கிறது வாட்ஸ்அப். வாட்ஸ்அப்பில் தொடர்புகளைத் தேடுவதற்கான தேடுதல் பட்டையில் லாக் செய்யப்பட்ட சாட்களுக்கான ரகசியக் குறியீட்டை நாம் டைப் செய்து அவற்றை நாம் அணுகும் வகையில் புதிய வசதியை வடிவமைத்திருக்கிறது வாட்ஸ்அப். தற்போது பீட்டா சோதனைக்காக இந்த வசதி வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த சில வாரங்களில் அனைத்து பயனாளர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.