ஒரு முறை மட்டுமே கேட்க அனுமதிக்கும் வகையிலான ஆடியோ குறுஞ்செய்தி வசதி
வாட்ஸ்அப் நிறுவனமானது, தங்களது பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை சோதனை செய்தும், அறிமுகப்படுத்தியும் வருகிறது. முன்னதாக பயனாளர்களின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பை மனதில் கொண்டு ஒரு முறை மட்டுமே நாம் அனுப்பும் புகைப்படங்களை பார்க்க அனுமதிக்கும் வகையிலான வசதியை 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்தது வாட்ஸ்அப் நிறுவனம். இந்த வசதியின் உதவியுடன், குறிப்பிட்ட நபருக்கும் நாம் அனுப்பும் புகைப்படத்தை அவர் பார்த்தவுடன் அது மறைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதே போன்ற வசதியை ஆடியோ குறுஞ்செய்திகளுக்கும் அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப். இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா பயனாளர்கள் மூலம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பின் புதிய வசதி:
வாட்ஸ்அப் பீட்டா பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் இந்தப் புதிய வசதியின்படி, நாம் ஆடியோ குறுஞ்செய்திகளை பதிவு செய்யும் போதே, அதற்கருகில் '1' என்ற ஆப்ஷன் தோன்றும். அந்த ஆப்ஷனை கிளிக் செய்து நமது ஆடியோ குறுஞ்செய்தியை அனுப்பினால் போது. நாம் அனுப்புபவர் அதனை ஒரு முறை கேட்டு முடித்தவுடன், அது தானாகவே அழிந்துவிடும். மேலும், நாம் அனுப்பும் ஆடியோ குறுஞ்செய்தியை எதிர்தரப்பினர் பதிவும் செய்ய முடியாத வகையில் இந்தப் புதிய வசதியை வடிவமைத்திருக்கிறது வாட்ஸ்அப். பீட்டா சோதனையாளர்களைத் தொடர்ந்து, விரைவில் பொதுப் பயனாளர்களுக்கு இந்த வசதியை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.