Page Loader
HD தரத்தில் வாட்ஸ்அப்பில் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமா? வருகிறது புதிய வசதி!
புதிய வசதியை சோதனை செய்துவரும் வாட்ஸ்அப்

HD தரத்தில் வாட்ஸ்அப்பில் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமா? வருகிறது புதிய வசதி!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 07, 2023
02:42 pm

செய்தி முன்னோட்டம்

தினசரி பயன்பாட்டில் தகவல்களைப் பகிர்வதற்கு சிறந்த தளமாக அனைவராலும் பயன்படுத்தப்படுவது வாட்ஸ்அப். ஆனால், HD தரத்தில் அல்லது சிறந்த தரத்தில் புகைப்படங்களை பகிர வேண்டும் என்றால் முதலில் புறக்கணிக்கப்படுவதும் வாட்ஸ்அப் தான். விரைவாக புகைப்படங்களைப் பகிர நாம் அனுப்பும் புகைப்படங்களின் தரத்தை தாமாகவே குறைத்து வாட்ஸ்அப் அனுப்புவது தான் அது புறக்கணிக்கப்படுவதற்கான காரணமாக இருக்கிறது. தரமான புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்ப வேறு சில வழிமுறைகளை பயனர்கள் கையாள்கிறார்கள். எனினும், நேரடியாக தரமான புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் இப்போதும் அனுப்ப முடியாது. இந்த பிரச்சினையை சரிசெய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது வாட்ஸ்அப். மேலும், இந்த புதிய வசதியானது தற்போது பீட்டா சோதனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

வாட்ஸ்அப்

HD தரத்தில் புகைப்படங்களை அனுப்ப புதிய வசதி: 

புகைப்படங்களை அனுப்பும் போது HD தரத்தில் (4096x2692) இருக்க வேண்டுமா அல்லது சாதாரண தரத்தில் (1600x1052) இருந்தால் போதுமா என நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் புதிய வசதியை உருவாக்கியிருக்கிறது வாட்ஸ்அப். அடிப்படையாக நாம் அனுப்பும் புகைப்படங்கள் சாதாரண தரத்திலேயே தான் அனுப்பப்படும். நமக்கு HD தரத்தில் அனுப்ப வேண்டும் என்றால், ஒவ்வொரு முறை புகைப்படத்தை அனுப்பும் போது அதனை நாம் தேர்ந்தெடுத்து பிறகு அனுப்ப வேண்டும். HD என்றாலும், நாம் அனுப்பும் உண்மையான தரத்திலேயே புகைப்படங்கள் அனுப்பப்படுமா என்றால், அது கேள்விக்குறி தான். சாதாரண தரத்தில் அனுப்பப்படுவதை விட இதில் தரத்தின் அளவு கொஞ்சம் நன்றாக இருக்கும், அவ்வளவு தான். விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.