புதிய வசதியினை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்!
உலகில் அதிக மொபைல் பயனர்களால் பயன்படுத்தப்படும் ஒரு குறுஞ்செய்தி செயலி வாட்ஸ்அப். இதில் பயனர்களின் தேவைக்காக தொடர்ந்து பல வசதிகளை அந்நிறுவனம் சேர்ப்பது வழக்கம். தற்போது பயனர்களின் தேவைக்காக புதிய வசதி ஒன்றை வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் வாட்அப்பில் இருந்தபடியே நேரடியாக புதிய எண்ணை நம்முடைய மொபைலில் நம்மால் சேமிக்க முடியாது. புதிய எண்ணை மொபைலில் சேமிக்க வேண்டும் என்றால், மொபைலில் காண்டாக்ட்ஸ் பக்கத்திற்கு சென்று தான் சேமிக்க முடியும். தற்போது, வாட்ஸ்அப்பில் இருந்தபடியே நேரடியாக புதிய எண்ணை நம் சேமிக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ முடியும் வகையிலான புதிய வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது.
வாட்ஸ்அப் பீட்டா (Whatsapp Beta):
புதிய வசதிகளை பயனர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன் சோதனை செய்து பார்ப்பதற்காக வாட்ஸ்அப் பீட்டா என்ற வசதியினைக் கொண்டிருக்கிறது வாட்ஸ்அப். மேற்கூறிய புதிய வசதியினை ஆண்ட்ராய்டிற்கு மட்டும் பீட்டா மூலமாகவே சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப். விரைவில் இந்த வசதியினை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி எப்போது வெளியிடப்படும் அல்லது வெளியிடப்படுமா என தெரியவில்லை. வாட்ஸ்அப் பீட்டா மூலம் நீங்களும் வாட்ஸ்அப்பின் புதிய சோதனை முயற்சிகளில் பங்கெடுக்க விரும்பினால், கூகுள் ப்ளேஸ்டோரில் வாட்ஸ்அப் பக்கத்தில் அதற்கான செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.