"போன் நம்பர் வேண்டும்!" வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம் குறித்த மத்திய அரசின் நோட்டீஸிற்கு நிறுவனம் பதில்
செய்தி முன்னோட்டம்
உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில், ஃபோன் நம்பரைக் காட்டாமல் பிறருடன் அரட்டையடிக்க உதவும் புதிய யூசர்நேம் (Username) அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த அம்சம் ஆன்லைன் மோசடிகள், டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் ஆள்மாறாட்டத்திற்கு வழிவகுக்கும் என மத்திய அரசு மெட்டா நிறுவனத்திற்கு 3 நாட்களுக்குள் விளக்கமளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த புதிய அம்சத்தில் பல்வேறு கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
ஆள்மாறாட்டம்
ஆள்மாறாட்டத்தைத் தடுக்க வாட்ஸ்அப் எடுத்துள்ள நடவடிக்கை
மத்திய அரசின் நோட்டீஸிற்கு பதிலளித்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், இந்த யூசர்நேம் அம்சம் தற்பொழுது பயன்பாட்டிற்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் படிப்படியாகவே அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், பிரபல பொது நபர்கள், அரசு நிறுவனங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மெட்டா கணக்குகளின் (Verified Meta accounts) பெயர்களைப் பிறர் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, அவர்களின் உண்மையான யூசர்நேம்களும், அவற்றைப் போன்ற போலிப் பெயர்களும் முன்கூட்டியே ரிசர்வ் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
யூசர்நேம் கீ
புதிய மெசேஜ்களைக் கட்டுப்படுத்த 'யூசர்நேம் கீ' (Username Key)
புதிய அம்சத்தின்படி, யாராவது ஒருவர் உங்களது யூசர்நேமைத் தேடிப் பொதுப் பட்டியலில் இருந்து கண்டறியும் வகையில் பொது தேடல் அமைப்பு (Public search directory) எதுவும் இருக்காது. உங்களது துல்லியமான யூசர்நேமைத் தெரிந்தவர்கள் மட்டுமே உங்களுக்கு முதன்முறையாக மெசேஜ் அனுப்ப முடியும். மேலும், யார் நமக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த 'யூசர்நேம் கீ' (Username key) என்ற கூடுதல் விருப்பப் பாதுகாப்பு அமைப்பும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் கணக்குகளைத் தானியங்கி முறையில் யூகித்து மெசேஜ் அனுப்பும் ஸ்பேம்கள் முற்றிலும் தடுக்கப்படும்.
புதிய நபர்களின் தகவல்
புதிய நபர்களைப் பற்றிய தகவல்கள் உடனே தெரியவரும்
வாட்ஸ்அப்பில் ஒரு புதிய நபர் உங்களது யூசர்நேம் மூலம் முதன்முறையாகத் தொடர்பு கொள்ளும்போது, அவர் புதிய கணக்கா, உங்களது தொடர்பில் உள்ளவரா, உங்களுடன் பொதுவான குரூப்களில் இருக்கிறாரா மற்றும் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற மிக முக்கியமான பின்னணித் தகவல்களை வாட்ஸ்அப் திரையில் காட்டும். இதன் மூலம் பயனர்கள் அந்த நபருக்குப் பதிலளிக்கலாமா வேண்டாமா என்பதைத் தாங்களே சுயமாக தீர்மானிக்க முடியும். தற்பொழுது பயனர்கள் தங்களுக்குப் பிடித்த பெயர்களைப் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பக்கத்தில் ரிசர்வ் செய்யத் தொடங்கலாம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.