'இரகசியக் குறியீட்டு' வசதியை அனைத்து பயனாளர்களுக்கும் வெளியிட்ட வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்பில் 'இரகசியக் குறியீட்டு' (Secret Code) வசதியின் அறிமுகத்தின் மூலமாக, பயனாளர்களுக்கு 'இரகசிய சாட்'களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த வசதியை அந்நிறுவனம் மேம்படுத்தியும், சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இரகசியக் குறியீட்டு வசதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். ஒவ்வொரு கட்டமாக பல்வேறு நாடுகளில் உள்ள வாட்ஸ்அப் பயனாளர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தி வருவதாகவும், விரைவில் அனைத்து பயனாளர்களும் இந்தப் புதிய வசதியைப் பயன்படுத்தத் தொடங்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறார் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸூக்கர்பெர்க். தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்அப் உருவாக்கி வந்த பல்வேறு வசதிகளுள் இதுவும் ஒன்று எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
எப்படி செயல்படுகிறது இந்த 'இரகசியக் குறியீடு' வசதி?
இந்த இரகசியக் குறியீடு வசதியானது, நாம் பாதுகாப்பாக வைத்திருக்க நினைக்கும் சேட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அடுக்கா அமைந்து விடுகிறது. இதன் மூலம் நாம்மால் லாக் செய்யப்பட்ட சாட்கள் கொண்ட ஃபோல்டரைத் திறக்க ஒரு இரகசியக் குறியீட்டை, வாட்அப்பின் தேடுதல் பட்டையில் இட வேண்டும். சரியான இரகசியக் குறியீட்டை டைப் செய்தால் மட்டுமே லாக் செய்யப்பட்ட ஃபோல்டர் திறக்கும். இல்லையென்றால், நாம் சாட்களை லாக் செய்து வைத்திருக்கிறோம் என்பதைக் கூட பிறரால் கண்டறிய முடியாது. ஆம், இதுவரை முகப்புப் பக்கத்தில் வெளிப்படையாகக் காட்டப்பட்டு வந்த லாக் செய்யப்பட்ட சாட்கள் ஃபோல்டரானது இனி அங்கு காட்டப்படாமல் மறைக்கப்படவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.