வாட்ஸ்அப்பில் அதிகரிக்கும் சர்வதேச ஸ்பேம் கால்கள்.. என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது வாட்ஸ்அப்?
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாக இந்திய வாட்ஸ்அப் பயனர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா, கென்யா மற்றும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த எண்களில் இருந்து இந்திய பயனர்களுக்கு அதிகளவில் ஸ்பேம் கால்கள் வருவதாக பல்வேறு வாட்ஸ்அப் பயனர்களும் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தப் புதிய பிரச்சினை குறித்து செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "மத்திய அமைச்சரவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது, இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்களைக் கொண்டு இந்தப் பிரச்சினையைக் குறைக்க தீர்வு காணவிருப்பதாக தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்
எப்படி இந்த புதிய பிரச்சினையை எதிர்கொள்ளவிருக்கிறது வாட்ஸ்அப்?
AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்பேம் மெஸேஜ் மற்றும் கால்களை கண்டறிந்து, பயனர்களை அடைவதற்கு முன்பாகவே அதனை பிளாக் செய்யத் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப்.
மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்தின் மூலம் ஸபேம் ஃபில்டரிங் சிஸ்டத்தின் துல்லியத்தன்மையையும் அதிகரிக்கவிருக்கிறது. இதுவரை திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இதனைச் செய்யவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.
இவை தவிர, ஸ்பேம் கால்கள் மற்றும் மெஸேஜ்களை அடையாளம் காண பயனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பயனர்களுக்கு எப்படி ஸ்பேம் மெஸேஜ்களை பிரித்தரிவது என்பது குறித்து கற்றுக்கொடுப்பது மற்றும் ஸ்பேம் மெஸேஜ் மற்றும் கால்களைக் கண்டறிந்தால் உடனடியாக அதிகுறித்து ரிப்போர்ட் செய்யும் வகையில் வாட்ஸ்அப் செயலியிலேயே ரிப்போர்ட்டிங் ஆப்ஷனை கொடுப்பது உள்ளிட்ட பிற முயற்சிகளையும் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப் நிறுவனம்.