இனி வாட்ஸ்அப்பிலும் விளம்பரங்கள்! ஸ்டேட்டஸ் பார்க்கும் போது ஜாக்கிரதை! உலகளவில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்
செய்தி முன்னோட்டம்
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், உலகெங்கிலும் உள்ள தனது பயனர்களுக்கு ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் மற்றும் புரமோட்டட் சேனல்கள் ஆகிய வசதிகளை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் புதிய வணிக நிறுவனங்கள் மற்றும் சேனல்களை எளிதில் கண்டறியவும், அவற்றுடன் தொடர்புகொள்ளவும் இந்த முயற்சி உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே சோதனை முறையில் வழங்கப்பட்ட இந்த வசதி, இனி உலகளவில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும்.
விளம்பரங்கள்
விளம்பரங்கள் எங்கே தோன்றும்?
இந்த விளம்பரங்கள் வாட்ஸ்அப்பின் அப்டேட்ஸ் டேப்பில் மட்டுமே தோன்றும். நீங்கள் வழக்கமாகப் பார்க்கும் ஸ்டேட்டஸ்களுக்கு இடையே இவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் வருவது போலவே, இந்த விளம்பரங்களை நீங்கள் ஸ்வைப் செய்வதன் மூலம் தவிர்த்துவிட முடியும். "தனிப்பட்ட மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் ஸ்டேட்டஸ்கள் எப்போதும் போல மறைகுறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். தனிப்பட்ட உரையாடல்களில் எந்த மாற்றமும் இருக்காது." என்று வாட்ஸ்அப் உறுதி அளித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
பயனர்களுக்கான கட்டுப்பாடுகள்
விளம்பரங்களால் பயனர்கள் எரிச்சல் அடையக்கூடாது என்பதற்காகச் சில கட்டுப்பாடுகளையும் வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் விளம்பரங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அதைத் தடுக்கவோ அல்லது மறைக்கவோ முடியும். மேலும், ஐரோப்பா போன்ற சில பகுதிகளில், விளம்பரங்களே இல்லாத அனுபவத்தைப் பெற சந்தா செலுத்தும் முறையையும் வாட்ஸ்அப் பரிசோதித்து வருகிறது. இதன் மூலம் கட்டணம் செலுத்தி விளம்பரங்களைத் தவிர்க்கும் வசதி எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கும் வரக்கூடும்.
புதிய வசதி
குழு உரையாடல்களுக்கான புதிய வசதி
விளம்பரங்கள் தவிர, குரூப் சாட் ஹிஸ்டரி என்ற மற்றொரு பயனுள்ள வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு புதிய நபர் குழுவில் இணையும் போது, அவர் சேருவதற்கு முன்னால் பகிரப்பட்ட 25 முதல் 100 மெசேஜ்கள் வரை அவருக்குத் தெரியும்படி அட்மின்கள் செய்ய முடியும். முன்னதாக, புதிய உறுப்பினர்கள் இணைந்த பிறகு வரும் மெசேஜ்களை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த புதிய அப்டேட் மூலம் குழுவின் முந்தைய உரையாடல்களைப் புதியவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.