'சேனல்ஸ்' வசதி தொடர்பான புதிய அப்டேட்டை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப்பில் 'சேனல்ஸ்' வசதியை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். குறுஞ்செய்தி மற்றும் தகவல் பறிமாற்றத் தளத்திலிருந்து சமூக வலைத்தளமாக வாட்ஸ்அப் உருப்பெறுவதற்கான முதல் படி இது.
இந்த சேனல்ஸ் வசதியின் உதவியுடன், பல்வேறு பிரபலங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பிற சேவை வழங்கும் தளங்கள் அனைத்து வாட்ஸ்அப்பில் தங்களது பயனாளர்களுடன் இணைந்திருக்க முடியும்.
மேலும், ஒரு சமூக வலைத்தளத்தில் பகிர்வுகளைப் பகிர்வதைப் போன்ற சேனல்களிலும் பகிர்வுகளைப் பகிரமுடியும்.
ஆனால் பிற சமூக வலைத்தளங்களைப் போல, நம்முடைய நடவடிக்கைகளை பிறரால் பார்க்க முடியாது. நாம் எந்தெந்த பக்கங்களைப் பின்தொடர்கிறோம் என நமக்கு மட்டுமே தெரியும் என்பதால், தனியுரிமையுடன் கூடிய பயன்பாட்டு அனுபவத்தை வழங்குகிறது இந்த வசதி.
வாட்ஸ்அப்
சேனல்ஸ் வசதியில் புதிய அப்டேட்:
புதிய வசதியை அறிமுகப்படுத்தியைத் தொடர்ந்து, இந்த வசதி தொடர்பான புதிய அப்டேட் ஒன்றை விரைவில் வாட்ஸ்அப் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
வாட்ஸ்அப்பில் பகிரப்படும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து தான் நம்மால் பார்க்க முடியும். மேலும், அப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படங்கள் நம்முடைய ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜிலேயே இருக்கும்.
சேனல்களில் அதிகமான புகைப்படங்கள் பகிரப்படும் போது, அவை நம் ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜின் பெரம்பகுதியை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே, அந்தப் பிரச்சினை எழாமல் இருக்க, சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாமாகவே அழியும்படியான புதிய அப்டேட் ஒன்றை சோதனை செய்து வருகிறது வாட்ஸ்அப்.
இந்த வசதியை விரைவில் அனைத்துப் பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.