'பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி' மூலம் தகவல்களை திருடும் புதிய மோசடி
'பிங்க்' நிறத்தில் புதிய வாட்ஸ்அப் வெர்ஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் வாட்ஸ்அப் செயலியில் இருப்பதை விட பல்வேறு புதிய வசதிகள் இருப்பதாகவும் கூறி பதிவிறக்கம் செய்யக்கூடிய லிங்குடன் குறுஞ்செய்தி ஒன்று வாட்ஸ்அப் தளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இது நம்முடைய தகவல்கலை திருடும் மோசடி செயலி எனத் தெரியாமல் பல வாட்ஸ்அப் பயனர்களும் மற்றவர்களுக்கு பார்வர்டு செய்து வருகின்றனர். இந்த பிங்க நிற வாட்ஸ்அப் செயலி மோசடியானது கடந்த 2021-ம் ஆண்டே உருவாக்கப்பட்டு, இந்தியாவில் பல ஸ்மார்ட்போன் பயனர்களின் தகவல்கள் இதன் மூலம் திருடப்பட்டது. தற்போது மீண்டும் அதே மோசடி செயலியை வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திப் பகிர்வின் மூலம் நிறைய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பரப்பி வருகின்றனர் மோசடி நபர்கள்.
பிங்க் நிற வாட்ஸ்அப் செயலி:
இந்த பிங்க் நிற வாட்ஸ்அப் செயலியானது கூகுள் ப்ளே ஸ்டோரிலோ, ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலோ பட்டியலிடப்படவில்லை. இதனை இணையத்தில் இருந்து நமது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து பின்னர் தான் இன்ஸ்டால் செய்ய முடியும். ஆப்பிள் ஐபோனில், இது போன்று ஆப் ஸ்டோரில் இல்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய முடியாது. எனவே, ஐபோன் பயனர்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஆண்ட்ராய்டு பயனர்கள், அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் செயலியைத் தவிர்த்து மேற்கூறிய வகையில் புதிய வாட்ஸ்அப் செயலிகளை இன்ஸ்டால் செய்திருந்தால், அதனை உடனடியாக ஸ்மார்ட்போனில் இருந்து அன்இன்ஸ்டால் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். மேலும், இது போல வாட்ஸ்அப் பகிரப்படும் குறுஞ்செய்திகளில் வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.