இனி Whatsapp ஸ்டேட்டஸ் பார்க்க 'Updates' போக வேண்டாம்; சாட் லிஸ்டிலேயே வரும் புதிய வசதி
செய்தி முன்னோட்டம்
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், பயனர்கள் தங்களது நண்பர்களின் ஸ்டேட்டஸ் அப்டேட்களை மிக எளிதாகப் பார்க்கும் வகையில் புதிய வசதியைக் கொண்டு வரவுள்ளது. இனி ஸ்டேட்டஸ் பார்ப்பதற்காகத் தனியாக 'Updates' பகுதிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது சோதனை முறையில் உள்ள இந்த புதிய வசதியின் மூலம், வாட்ஸ்அப்பின் 'Chats' டேப்பின் மேல்பகுதியிலேயே ஸ்டேட்டஸ் அப்டேட்கள் தோன்றும்.
ஸ்டேட்டஸ் டிரே
சாட் டேப்பில் புதிய ஸ்டேட்டஸ் டிரே
இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் மேல்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை போலவே, வாட்ஸ்அப்பிலும் இனி ஸ்டேட்டஸ்கள் வரிசையாகத் தோன்றும். இதன் மூலம் சமீபத்திய மூன்று ஸ்டேட்டஸ் அப்டேட்களை நேரடியாகப் பார்க்க முடியும். மேலும், மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களைப் பார்க்க வலதுபுறம் 'ஸ்க்ரோல்' (Scroll) செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவருடன் சாட் செய்திருந்தால் மட்டுமே அவரது ஸ்டேட்டஸை சாட் லிஸ்டில் பார்க்க முடிந்தது. இனி அனைத்துத் தொடர்புகளின் ஸ்டேட்டஸ்களையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
விளக்கம்
அப்டேட்ஸ் (Updates) டேப் மறையுமா?
நிச்சயமாக இல்லை! 'Updates' பகுதி தொடர்ந்து செயல்படும். அங்கு ஸ்டேட்டஸ்கள் பெரிய அளவிலான 'பிரிவியூ' உடன் தோன்றும். ஆனால், சாட் டேப்பில் இது மிகவும் கச்சிதமான வடிவில் இருக்கும். பயனர்களுக்குத் தொந்தரவு தராத வகையில் இடைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கிடைக்கும்தன்மை
யாரெல்லாம் இதைப் பயன்படுத்தலாம்?
தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பீட்டா 2.26.17.1 பதிப்பைப் பயன்படுத்தும் சில குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி என்பதால், தற்போது இந்த ஸ்டேட்டஸ் பகுதிக்கு இடையே எந்தவொரு விளம்பரங்களும் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா பயனர்களின் வரவேற்பைப் பொறுத்து, வரும் வாரங்களில் இது அனைத்துப் பயனர்களுக்கும் பொதுவான அப்டேட்டாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.