பிள்ளைகளின் வாட்ஸ்அப்பை இனி பெற்றோர் கண்காணிக்கலாம்! மெட்டா நிறுவனத்தின் புதிய அப்டேட்; சாட்களைப் படிக்க முடியுமா?
செய்தி முன்னோட்டம்
சமூக வலைதளப் பயன்பாட்டில் சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதுப் (Teenagers) பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென பல்வேறு நாடுகளின் அரசுகளும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், தனது வாட்ஸ்அப் செயலியில் பதின்ம வயதினரின் கணக்குகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலான புதிய பேரண்டல் கன்ட்ரோல் (Parental Controls) வசதிகளை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
தனிப்பட்ட செய்திகள்
தனிப்பட்ட செய்திகளை பார்க்க முடியாது
இப்புதிய அம்சம் தொடர்பாக மெட்டா வெளியிட்டுள்ள தெளிவுரையில், பெற்றோர் கட்டுப்பாடுகள் இயக்கப்பட்டாலும் பிள்ளைகளின் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட தனிப்பட்ட குறுஞ்செய்திகளையோ அல்லது குரல் வழி அழைப்புகளையோ பெற்றோரால் படிக்கவோ, கேட்கவோ முடியாது என உறுதிபடத் தெரிவித்துள்ளது.
செய்தி உரையாடல்களின் ரகசியத் தன்மை தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
கட்டுப்பாடு
பெற்றோர் எவற்றையெல்லாம் கட்டுப்படுத்த முடியும்?
பெற்றோர்கள் தங்களது தொலைபேசியை இணைத்து ஒரு குறிப்பிட்ட PIN எண்ணைப் பயன்படுத்திப் பின்வரும் அம்சங்களைக் கட்டுப்படுத்த முடியும்:
சுயவிவரப் படம் & குரூப்கள்: பிள்ளைகளின் ப்ரொஃபைல் படத்தை யார் பார்க்கலாம், அவர்களை யார் புதிய வாட்ஸ்அப் குரூப்களில் சேர்க்கலாம் என்பதைத் தீர்மானிக்கலாம்.
குரூப் அறிவிப்புகள்: பிள்ளைகள் ஏதேனும் புதிய குரூப்பில் இணையும் போதோ அல்லது வெளியேறும் போதோ பெற்றோருக்குக் குறுஞ்செய்தி அறிவிப்பு வரும்.
மெட்டா ஏஐ கட்டுப்பாடு: வாட்ஸ்அப்பில் உள்ள மெட்டா ஏஐ உதவி அம்சத்தை வழக்கமான 13+ அமைப்பிலிருந்து மாற்றி, மிகவும் பாதுகாப்பான லிமிட்டட் கன்டென்ட் என்ற கடுமையான கட்டுப்பாட்டு முறைக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
சேனல்கள் & ஸ்டேட்டஸ்: பொது சேனல்கள் மற்றும் ஸ்டேட்டஸ் பயன்பாட்டையும் பெற்றோர் தேவைக்கேற்ப கட்டுப்படுத்தலாம்.
விவாதங்கள்
விருப்பத் தேர்வு முறை குறித்து எழும் விவாதங்கள்
இந்த கன்ட்ரோல் அம்சங்கள் அனைத்தும் கட்டாயமானது அல்ல. முற்றிலும் விருப்பத் தேர்வாகும்.
பிள்ளைகளும் பெற்றோரும் பேசி முடிவெடுக்கவே இம்முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ள போதிலும், இது கட்டாயமில்லாததால் எத்தனை குடும்பங்கள் இதனை முழுமையாகப் பயன்படுத்தும் என்ற கேள்வியைச் சமூக வலைதள பகுப்பாய்வாளர்கள் எழுப்பியுள்ளனர்.
உலகம் முழுவதும் கட்டம்கட்டமாக நடைமுறைக்கு வரும் இச்சேவை விரைவில் இந்தியப் பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவுள்ளது.