ஸ்டேட்டஸ்கள் தொடர்பான புதிய வசதி ஒன்றை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் நிறுவனமானது புதிய வசதி ஒன்றை சோதனை செய்யும் பொருட்டு 2.23.25.3 என்ற பீட்டா வெர்ஷனாக குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வெளியிட்டிருக்கிறது. வாட்ஸ்அப்பில் சேனல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, ஸ்டேட்டஸ் வசதியின் பயன்பாடானது முன்பு போல இல்லை. சேனல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் செங்குத்தாக நம்முடைய தொடர்புகளின் ஸ்டேட்டஸ்கள் பட்டியலாக வரும். ஆனால், தற்போது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மேல ஒரே வரிசையில் ஸ்டேட்டஸ்களைக் காட்டும் வகையில் வடிவமைத்திருக்கிறது. இந்நிலையில், முந்தைய டிசனையே மீண்டும் கொண்டு வரும் வகையில் இந்தப் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப்பின் புதிய ஸ்டேட்டஸ் அப்டேட்:
புதிய அப்டேட்டின் படி, பழைய ஸ்டேட்டஸ் டிசனை விரும்பும் பயனாளர்கள் அதனைப் போலவே மாற்றிப் பயன்படுத்தும் வசதியை அளித்திருக்கிறது வாட்ஸ்அப். மேலும், ஸ்டேட்டஸ்களை ஃபில்டர் செய்யும் வசதியையும் புதிய அப்டேட்டின் கீழ் அளித்திருக்கிறது அந்நிறுவனம். அதாவது, சமீபத்திய ஸ்டேட்டஸ்கள், நாம் பார்த்த ஸ்டேட்டஸ்கள், அனைத்து விதமான ஸ்டேட்டஸ்களும் மற்றும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்கள் என நான்கு விதமான ஃபில்டர்களைக் கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். வாட்ஸ்அப்பின் குறிப்பிட்ட சில பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் அனைத்து பயனாளர்களுக்கு இந்த வசதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.