Loading...
இந்திய பயனர்களுக்கு அதிர்ச்சி: திடீரென முடங்கிய Whatsapp; என்ன காரணம்?
இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த பயனர்களின் Whatsapp கணக்குகள் முடக்கப்பட்டன

இந்திய பயனர்களுக்கு அதிர்ச்சி: திடீரென முடங்கிய Whatsapp; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2026
08:44 am

செய்தி முன்னோட்டம்

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் தளத்தில், இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த பயனர்களின் கணக்குகள் திங்கள்கிழமை இரவு திடீரென 'Under Review' என்ற நிலைக்கு மாற்றப்பட்டு, அதன் பயன்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த பயனர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 8 மணி அளவில் இந்தச் சிக்கல் தொடங்கியது. எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, சேவை விதிகளுக்குட்பட்டு இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய கணக்குகள் மதிப்பாய்வில் வைக்கப்பட்டுள்ளதாக பயனர்களின் திரையில் அறிவிப்பு தோன்றியது. 24 மணி நேரத்திற்குள் இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்றும் அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொந்தளிப்பு

பயனர்களின் புலம்பலும் சமூக வலைதள கொந்தளிப்பும்

கணக்குகள் முடக்கப்பட்டதால் மெசேஜ் அனுப்புவது, அழைப்புகளை மேற்கொள்வது போன்ற எந்தவொரு அம்சத்தையும் பயன்படுத்த முடியாமல் பயனர்கள் திணறினர்.

தங்களின் அன்றாட பணிகளும் வேலைகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறி, X (ட்விட்டர்) போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எதிராக புகார்களை பதிவிட்டனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர், "எங்கள் சேவையைத் தவறாகப் பயன்படுத்துபவர்களிடமிருந்து மற்ற பயனர்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். இதற்காகவே கணக்குகளை ஆய்வு செய்து முடக்குகிறோம். ஆனால், சில நேரங்களில் தானியங்கி அமைப்புகளால் தவறுதலாக நியாயமான கணக்குகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அப்படித் தவறுகள் நடக்கும் பட்சத்தில், உடனடியாக அதனைச் சரிசெய்து பயனர்கள் மீண்டும் சேவையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT