LOADING...
வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்?
இதனை தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என FBI தெரிவித்துள்ளது

வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன? FBI பதறுவது எதற்காக? இது என்ன செய்யக்கூடும்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2025
03:10 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், இரண்டு சீனர்கள் மீது அமெரிக்காவிற்குள் ஒரு ஆபத்தான பூஞ்சையை கடத்தியதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது உணவு மற்றும் விவசாயத்தை குறிவைக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தேசிய பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என FBI தெரிவித்துள்ளது. அப்படி இந்த பூஞ்சை என்ன செய்யும்? எப்படி இதை வேளாண் பயங்கரவாத பொருளாக பயன்படுத்த முடியும் என்பதை இந்த நேரத்தில் தெரிந்துக்கொள்வது அவசியம்.

கூற்று

FBI கூறுவது என்ன?

FBI இந்த சம்பவத்தை "கடுமையான தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்" என வர்ணித்து, வேளாண் பயங்கரவாதம் என்பது உணவு வழங்கல், பொருளாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தை ஒரே நேரத்தில் பாதிக்கக்கூடிய சக்தியாக வளர்ந்து வருவதை வலியுறுத்தியுள்ளது. எனினும் இது ஒரு "ஜாம்பி பூஞ்சை" அல்ல; ஆனால், இது பயிர்களை அழிக்க, உணவுப் பதாரண்களுக்கு நச்சுகள் ஏற்படுத்த, மற்றும் பில்லியன் கணக்கான டாலர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய தீவிர உயிரியல் முகவராக இருக்கக்கூடும் என FBI அச்சம் தெரிவித்துள்ளது.

வேளாண் பயங்கரவாதம்

வேளாண் பயங்கரவாதம் என்றால் என்ன?

வேளாண் பயங்கரவாதம் என்பது நோய்கள், பூச்சிகள், அல்லது உயிரியல் முகவர்களை ஒரு நாட்டின் விவசாய மற்றும் உணவுப் பொருட்களை குறிவைத்து, சமூக, பொருளாதார, மற்றும் உள்நாட்டு அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் பயன்படுத்துவதை குறிக்கிறது. இது பொதுமக்களை நேரடியாக தாக்குவதில்லை, ஆனால் உணவுத் துறையின் மூலக் கழிவுகளை அழித்து, தட்டுப்பாடுகளையும் விலையுயர்வையும் உருவாக்கும்.

ஃபுசேரியம் கிராமினேரம்

கைப்பற்றப்பட்ட கேள்விக்குரிய பூஞ்சை: ஃபுசேரியம் கிராமினேரம்

FBI-யால் கைப்பற்றப்பட்ட பூஞ்சை, ஃபுசேரியம் கிராமினேரம் (Fusarium graminearum) ஆகும். இது, கோதுமை, பார்லி, ஓட்ஸ், சோளம் போன்ற முக்கிய தானியங்களை தாக்கும். அது, தலை கருகல் நோயை ஏற்படுத்தும். அதோடு, மைக்கோடாக்சின் எனப்படும் நச்சுகள் மூலம் மாசுபடுத்தும். இதனால், தாவரத்தின் மகசூலை குறைப்பது மட்டுமல்லாமல், உணவாகவே தகுதியற்றதாக மாறும். இந்த பூஞ்சையால் ஏற்பட்ட நோய், கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க விவசாயிகளுக்கு $3-4 பில்லியன் வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளது.

கவலை

ஏன் இந்த விவகாரம் கவலையை ஏற்படுத்துகிறது?

இந்த புஞ்சை வகை, எளிதாகக் கண்டறிய முடியாதது. அதோடு, வேகமாக பரவக்கூடியது மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடியது என்பதால் வேளாண் அமைப்பின் பாதுகாப்பில் ஒரு பெரிய துளை என FBI இதனை கருதுகிறது. இது ஒரு தனிப்பட்ட சட்ட மீறல் மட்டுமல்ல, அரசின் உள் பாதுகாப்பை சோதிக்கக்கூடிய முயற்சி என அதிகாரிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். வேளாண் பயங்கரவாதம் ஒரு வளர்ந்து வரும், ஆனால் அதிகம் பேசப்படாத தேசிய பாதுகாப்பு பிரச்சனை. இது தொடர்பான இந்த சமீபத்திய வழக்கு, உணவு பாதுகாப்பும் பாதுகாப்புக் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதை நினைவூட்டுகிறது.