சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல்
இஸ்ரோ விஞ்ஞானிகளின் நான்கு ஆண்டு கால உழைப்பிற்குப் பிறகு நேற்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3. இந்த வரலாற்று நிகழ்வை இந்திய மக்கள் அனைவரும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சந்திரயான் 3-யின் திட்ட இயக்குநராகச் செயல்பட்ட, தமிழகத்தை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல், சந்திரயான் 3யின் தரையிறக்கத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்படும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கியதை தொலைக்காட்சியில் காணும் அவர், ஆனந்தத்தில் கண்ணீர் சிந்தும் காட்சியை செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருக்கிறது.
வெற்றிக்கு பின்பு பேட்டியளித்த வீரமுத்துவேலின் தந்தை:
சந்திரயான் 3-ன் வெற்றிக்குப் பின்பு, அக்கம் பக்கத்தினர் வீரமுத்துவேலுக்கு சார்பாக அவருடைய தந்தைக்கு இனிப்புகளை வழங்கியும், வாழ்த்துக்களைத் தெரிவித்தும் மகிழ்ந்தனர். சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய மகன் மிகவும் கடினமாக உழைத்தாகவும், தான் மிக மிக மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். மேலும், வீரமுத்துவேல் பல நாட்கள் தன்னுடைய குடும்பத்தினருடன் கூட கலந்துரையாடாமல் கடுமையான உழைப்பை கொடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், ஒரு தந்தையாக இந்த மகிழ்வான தருணத்தை, இந்திய மக்களுடனும், தமிழக மக்களுடனும் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.