அணுக்கரு இணைவு மூலம் பாதரசத்தை தங்கமாக மாற்றியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் அறிவிப்பு; CERN சாதனை முறியடிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மாரத்தான் ஃபியூஷன் என்ற தொழில்நுட்ப நிறுவனம், அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதரசத்தை நிலையான தங்கமாக மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இடைக்கால இரசவாதிகளின் கனவாக இருந்த இந்த அணுக்கரு மாற்றத்தை அறிவியல் தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த செய்தி உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 மடங்கு உற்பத்தி
CERN அமைப்பின் சாதனையை முறியடித்து 10 மடங்கு உற்பத்தி
கடந்த 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஸ்விஸ் நகரில் உள்ள CERN ஆய்வகம் ஈய அணுக்களை மோதவிட்டு தங்கம் உருவாக்கியதே மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.
அந்த சாதனையை விட 10 மடங்கு அதிவேக உற்பத்தி திறனை எட்டியுள்ளதாக மாரத்தான் ஃபியூஷன் ஸ்டார்ட்அப் நிறுவனம் தற்பொழுது கூறியுள்ளது.
இருப்பினும், ஆய்வில் உற்பத்தி செய்யப்பட்ட தங்கத்தின் துல்லியமான அளவை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை.
மேலும் இது சுதந்திரமான வல்லுநர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
அணுக்கரு மாற்றம்
அணுக்கரு மாற்றத்தின் மூலம் தங்கம் உருவாக்கப்படும் முறை
இயற்கையில் கிடைக்கும் பாதரசம்-198 ஐ மூலப்பொருளாகக் கொண்டு இந்த அணுக்கரு மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
டியூட்டீரியம் மற்றும் டிரிட்டியம் அணுக்கரு இணைவின் போது வெளியாகும் அதிவேக நியூட்ரான்கள் பாதரசம்-198 மீது மோதவிடப்படுகின்றன.
இதன் மூலம் உருவாகும் கதிரியக்க பாதரசம்-197, எலக்ட்ரான் பிடிப்பு முறையில் சிதைவடைந்து நிலையான தங்கம்-197 ஆக மாறுகிறது.
இந்த செயல்முறையில் உருவாகும் கதிரியக்கக் கழிவுகளைக் கையாள்வதே முக்கிய சவாலாக உள்ளது.
புற்றுநோய் சிகிச்சை
புற்றுநோய் சிகிச்சைக்கான ஐசோடோப்புகள் தயாரிக்கும் திட்டம்
தங்கத்தை வணிக ரீதியாக மலிவான விலையில் உற்பத்தி செய்வதை விட, இந்த அணுக்கரு தொழில்நுட்பத்தை பல பயனுள்ள துறைகளுக்கு பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக புற்றுநோயைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படும் காப்பர்-64 மற்றும் காப்பர்-67 போன்ற மருத்துவ ஐசோடோப்புகளைத் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அணுக்கரு இணைவு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற ஆய்வுகள் எதிர்கால மருத்துவத்துறைக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.