AI தொழில்நுட்பங்களுக்கான புதிய சட்டம்.. என்ன செய்கிறது அமெரிக்கா?
உலகில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவைச் சேர்ந்தவை. ஆனால், AI-களுக்கான சட்டத்தை உருவாக்குவதில் தடைகளைச் சந்தித்து வருகிறது அமெரிக்கா. ஐரோப்பா மற்றும் சீனா ஆகியா நாடுகள் AI தொழில்நுட்பங்கள் குறித்த சட்டதிட்டங்களை உருவாக்கி அதனை அமல்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், இன்னும் எந்த வகையிலான இந்த AI தொழில்நுட்பத்துக்கான சட்டத்தை வடிவமைப்பது என குழம்பி நிற்கிறது அமெரிக்கா. AI சட்டமானது இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்து யாரிடமும் இல்லை. அனைவருக்கும் AI குறித்த ஒரு பார்வை இருக்கிறது, அது குறித்த ஒரு அச்சம் இருக்கிறது. இதுவே AI தொழில்நுட்பங்களுக்கான சட்டத்தை வகுக்க அமெரிக்காவிற்கு பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.
குழப்பத்தில் அமெரிக்கா?
ஒரு தரப்பினரோ மருத்துவம் மற்றும் நிதி உள்ளிட்ட முக்கியமான துறைகளில் மட்டும் AI-யின் பயன்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சட்டம் கொண்டு வரலாம் என்கின்றனர். மறுபக்கம் தனிநபர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில், அதில் பாகுபாடு காட்டாத வகையில் AI-க்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர். மேலும், AI-யை உருவாக்குபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதா அல்லது அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு விதிமுறைகளை விதிப்பதா என்பது குறித்த விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களுக்கான சட்டங்களைப் போல AI தொழில்நுட்பத்திலும் பின்தங்கி விடக்கூடாது, அதற்கு தொடக்கத்தில் இருந்தே கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்தோடு தான் தற்போது செயல்பட்டு வருகிறது அமெரிக்கா.