இந்தியாவில் புதிய மைல்கல்லை எட்டிய UPI பயன்பாடு
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து யுபிஐ பிரிவர்த்தனைகள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. 2016ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பணப்பரிவர்த்தனை முறையானது, சமீப காலமாக அதிகரித்திருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதன் முறையாக 1000 கோடி பணப்பரிவர்த்தனைகள் என்ற மைல்கல்லை யுபிஐ எட்டிய நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 1100 கோடி பணப்பரிவர்த்தனைகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது. மேலும், கடந்த அக்டோபர் மாதம் ரூ.17.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது பரிவர்த்தனை அளவில் 8%-மும், பரிவர்த்தனை மதிப்பில் 8.6%-மும் யுபிஐயின் பயன்பாடு உயர்ந்திருக்கிறது.
முன்னணியில் இருக்கும் போன்பே:
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் யுபிஐ சேவைகளை வழங்கி வந்தாலும், போன்பே நிறுவனமே அதிக அளவு பயனாளர்கள் மற்றும் பரிவர்த்தனைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த சில மாதங்களில் போன்பே மூலம் மட்டும் 5 பில்லியன் யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. போன்பேயைத் தொடர்ந்து, கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. யுபிஐ மூலம் கடன் வழங்கும் திட்டத்திற்கும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்திருப்பதையடுத்து இனி வரும் காலங்களில் இந்தியாவில் யுபிஐயின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைக் கடந்து பிரான்ஸ், பூட்டான், நேபாளம் மற்றும் சிங்கப்பூர் ஆகி நாடுகளிலும் யுபிஐ பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.