
யுபிஐ சர்வர் கோளாறால் பணம் செலுத்த முடியவில்லையா? கவலைய விடுங்க; இதை தெரிஞ்சிக்கோங்க
செய்தி முன்னோட்டம்
கடந்த இரண்டு வாரங்களில், இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவைகள் மூன்று முறை பெரிய அளவில் சர்வர் கோளாறை எதிர்கொண்டன.
இது மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை சீர்குலைத்து, டிஜிட்டல் உள்கட்டமைப்பை பெரிதும் நம்பியிருக்கும் அமைப்பின் சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 4,00,000 க்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதன்படி ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தோராயமாக 23 மில்லியன் பரிவர்த்தனை நடக்கும் நிலையில், யுபிஐ பயன்பாட்டில் சிக்கல் வருவது பொதுமக்களை கடும் அவதிக்கு உள்ளாக்குகிறது.
கடைசியாக கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 12) ஏற்பட்ட சமீபத்திய செயலிழப்பு, பல பயனர்களை மால்கள் மற்றும் உணவகங்களில் பணம் செலுத்த முடியாமல் செய்தது. இது பணமில்லா பொருளாதாரத்தின் பாதிப்பை வெளிப்படுத்தியது.
மாற்று வழிகள்
பணம் செலுத்துவதற்கான மாற்று டிஜிட்டல் வழிகள்
இருப்பினும், யுபிஐ சேவைகள் செயலிழந்தால் மாற்று டிஜிட்டல் கட்டண முறைகள் உள்ளன. அத்தகைய ஒரு விருப்பம் யுபிஐ லைட் சேவையாகும்.
இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (என்பிசிஐ) உருவாக்கப்பட்ட ஒரு அம்சமாகும்.
ஆஃப்லைனில் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட யுபிஐ லைட், முன்பே ஏற்றப்பட்ட டிஜிட்டல் பணப்பையைப் போல செயல்படுவதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் பணம் செலுத்த பயனர்களை அனுமதிக்கிறது.
பயனர்கள் ஒரு நாளைக்கு இதில் ரூ.4,000 வரை சேர்க்கலாம். தனிப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.500க்குக் குறைவாக இருக்க வேண்டும். கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இதில் பணம் செலுத்தலாம்.
மேலும் யுபிஐ பின் தேவையில்லை. இணைய இணைப்பு மீட்டமைக்கப்பட்டவுடன், பரிவர்த்தனைகள் பெறுநரின் கணக்கில் தானாகவே புதுப்பிக்கப்படும்.
என்எஃப்சி
என்எஃப்சி அடிப்படையிலான தீர்வு
மற்றொரு தீர்வு என்எஃப்சி அடிப்படையிலான ஆஃப்லைன் பேமெண்ட் ஆகும். இது கூகுள் பே போன்ற மொபைல் செயலிகள் மூலம் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.
இந்தப் பரிவர்த்தனைகளுக்கு என்எஃப்சியை சப்போர்ட் செய்யும் PoS இயந்திரம் தேவைப்படுகிறது மற்றும் இணைப்பு மீண்டும் தொடங்கியவுடன் தானாகவே பணப் பரிமாற்றம் செயலாக்கப்படும்.
டிஜிட்டல் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், தொழில்நுட்ப இடையூறுகளின் போது கூட, தடையற்ற நிதி பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கு இத்தகைய ஆஃப்லைன் கட்டண விருப்பங்கள் முக்கியமானதாகி வருகின்றன.