Loading...
70 ஆண்டுகளில் இல்லாத சூப்பர் சைஸ் எல் நினோ! பூமிக்கு பெரும் ஆபத்து; ஐநா சபை எச்சரிக்கை
சூப்பர் சைஸ் எல் நினோ எச்சரிக்கை

70 ஆண்டுகளில் இல்லாத சூப்பர் சைஸ் எல் நினோ! பூமிக்கு பெரும் ஆபத்து; ஐநா சபை எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 03, 2026
04:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் பேரழிவு தரும் தீவிரமான வானிலை மாற்றங்கள் தொடங்கும் ஆபத்தான கட்டத்தில் பூமி நுழைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ இயற்கை நிகழ்வானது நமது கண்களுக்கு முன்னாலேயே சூப்பர் சைஸாக உருவெடுத்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த எல் நினோ மிகச் சக்திவாய்ந்ததாக மாறும் என்றும், இதன் தாக்கம் 2027 பிப்ரவரி வரை நீடிக்கும் என்றும் உலக வானிலை மையம் கணித்துள்ளது.

பாதிப்புகள்

கடல் வெப்பநிலை உயர்வு மற்றும் உலகளாவிய பாதிப்புகள்

மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட 2 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது வரும் மாதங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழமான கடல் பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

இதனால் தெற்கு ஆஸ்திரேலியாவில் கடல் வெப்ப அலைகள் வீசி, கடல்வாழ் உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

முடக்கம்

வறட்சி, தீ விபத்துகள் மற்றும் கப்பல் போக்குவரத்து முடக்கம்

தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைந்த மழைப்பொழிவே பதிவாகும் என்பதால், கடும் வறட்சியும் காட்டுத்தீ ஆபத்தும் அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் 1,07,000 ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டு அடர்ந்த புகை சூழ்ந்துள்ளது.

மேலும், மழைப்பற்றாக்குறை காரணமாகப் பனாமா கால்வாயில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆபத்துகள்

அதிதீவிர புயல்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் உயிரிழப்பு ஆபத்துகள்

இந்த சூப்பர் எல் நினோ காரணமாகச் சீனாவில் மட்டும் இந்த ஆண்டு 7 சக்திவாய்ந்த சூறாவளிப் புயல்கள் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் வீசிய டால்பின் புயலால் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அதே நேரத்தில், கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு பிரேசில் மற்றும் அமெரிக்கப் பகுதிகளில் அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்காகப் பெரு போன்ற நாடுகள் அவசர மருத்துவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

ADVERTISEMENT