உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட சில உள்நாட்டு ஸ்டார்ட்-அப்களின் அவலம்
சமீபத்தில், உக்ரேனிய ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகள் குழு லாஸ் வேகாஸுக்கு, உலகின் தொழில்நுட்பக் கூட்டத்தில் (The Consumer Electronics Show) கலந்து கொள்ள பல இடையூறுகளை தாண்டி வந்திருந்தனர். போரினால் தாங்கள் சந்திக்கும் துயரங்களையும், அதில் இருந்து மீள தாங்கள் கடைபிடுக்கும் யுக்தியையும் பகிர்ந்து கொண்டனர். உக்ரைனைச் சேர்ந்த, வீட்டுப் பாதுகாப்பு நிறுவனமான ஜி-மேக்கின் உரிமையாளர் கூறுகையில், நாட்டின் உட்கட்டமைப்பு சீரழிந்துள்ள நிலையில், அவரின் வியாபாரமும் இப்போது கேள்விக்குறியாகி உள்ளது, எனத்தெரிவித்தார். ஆன்லைன் கிச்சன் டிசைனரான ஆர்டெம் டிடின்ஸ்கியை பொறுத்தவரை, மின்சாரம் என்பது தற்போது கிய்வில் ஒரு ஆடம்பரமாகும். இப்போது எரிவாயு நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் உதவியால், தனது அலுவல்களை செய்வதாக அவர் கூறினார்.
உக்ரைன் ஸ்டார்ட்-அப்களின் தற்போதைய நிலைமை
மரியானா எனும் மற்றொருவர், ரோமானியக் ரெகாவா நிறுவனத்தில் பணிபுரிகிறார். ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள சுமி நகரத்தில் செயல்பட்டு வந்த அவரது நிறுவனத்தை, போர் காலத்தில், 800 கிமீ க்கு அப்பால் எடுத்து சென்றுவிட்டனர் எனக்கூறினார். உக்ரைன் நாட்டில், வெடிகுண்டுகள் மற்றும் மின்சார பற்றாக்குறைக்கு மேல், புதிய நிறுவனங்களுக்கு நிதியுதவி பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, என மரியானா மேலும் கூறுகிறார். மற்றொரு நிறுவனமான, eFarm, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உக்ரேனிய விவசாயிகள், தங்கள் வயல்களில் உரங்களைப் பயன்படுத்துவதற்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது, வயலில் உள்ள கண்ணிவெடிகளைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை சோதனை செய்து வருகிறது. eFarm இன் தலைவர், உக்ரேனிய வயல்களில் 30%,போரினால் மாசடைந்து விட்டதாக கூறினார்.