'ட்விட்டர் ப்ளூ டிக்' சந்தா சேவை மீண்டும் தொடக்கம்
ட்விட்டர் நிறுவனம் சென்ற சனிக்கிழமையன்று, ட்விட்டர் ப்ளூ சேவையை பெற விரும்பும் பயனாளர்களை வரவேற்பதாகவும், அந்த சிறப்பு சேவை திங்கள் முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தது. மறுதொடக்கம் செய்யப்பட்ட சேவையானது இணைய பயனர்களுக்கு மாதம் $8 மற்றும் ஐபோன் பயனர்களுக்கு $11 என்ற விலையில் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இந்த ப்ளூ டிக் சேவை பன்னாட்டு நிறுவனங்கள், பிரபலங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு, அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டதும் வழங்கப்பட்டது. அக்டோபரில் எலான் மஸ்க் ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிய பிறகு, மாத சந்தாவாக $8 செலுத்த விரும்பும் எவருக்கும் இந்த நீல நிற டிக் அங்கீகாரம் வழங்க போவதாக அறிவித்தார்.
ப்ளூ டிக் சந்தா
இந்த செயலால், மஸ்க்கின் மற்ற கம்பெனிகளான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பெயரிலும், இன்னும் நிறைய போலி பயனாளர்கள் அணுக ஏதுவாக அமைந்தது. எனவே ட்விட்டர் அந்த சேவையை தொடங்கப்பட்ட சில நாட்களில் நிறுத்தியது. முந்தைய முயற்சி தோல்வியடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ட்விட்டர் மீண்டும் அதன் பிரீமியம் சேவையைத் தொடங்க உள்ளது. ப்ளூ டிக் சந்தா பெறும் சந்தாதாரர்கள் குறைவான விளம்பரங்களைப் பார்ப்பார்கள், நீண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும் எனவும் மற்றும் அவர்களின் ட்வீட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, ட்விட்டரில் தெரியப்படுத்தவும் முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.