பதிவுகளை 'எடிட்' செய்யும் நேரத்தை இரட்டிப்பாக்கிய ட்விட்டர்!
தங்களுடைய சமூக வலைத்தளத்தில் பயனர்கள் பதிவிடும் ட்வீட்டை 30 நிமிடங்களிளுக்கு எடிட் செய்யும் வசதியை வழங்கி வருகிறது ட்விட்டர் நிறுவனம். இது அனைத்து பயனர்களுக்கும் அல்ல, ட்விட்டரின் கட்டண சேவையான ட்விட்டர் ப்ளூ பயனாளர்களுக்கு மட்டும். தற்போது, பதிவு செய்த ட்வீட்களை எடிட் செய்யும் வசதியினை இரட்டிப்பாக்கி 1 மணி நேரமாக உயர்த்தியிருக்கிறது ட்விட்டர் நிறுவனம். இதனை தங்கள் தளத்தின் ட்விட்டர் ப்ளூ பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்திருக்கிறது ட்விட்டர். இந்த வசதியானது ட்விட்டர் பதிவிடப்படும் பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும், மறுமொழிகளுக்கு (Replies) அல்ல என்பதையும் முன்னரே அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ட்விட்டர் ப்ளூ சந்தா குறித்த அறிவிப்பு பக்கத்திலும் அந்நிறுவனம் அப்டேட் செய்திருக்கிறது.
எலான் மஸ்க்கும், ட்விட்டர் ப்ளூவும்:
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி பிறகு அந்நிறுவனத்தின் கட்டண சேவையான ட்விட்டர் ப்ளூவை அதிகமாக விளம்பரப்படுத்தினார். பதிவிட்ட ட்வீட்களை எடிட் செய்து கொள்ளும் வசதி, குறைவான விளம்பரங்கள், நீல நிற டிக்மார்க் என பல்வேறு வசதிகளை ட்விட்டர் ப்ளூ வாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமாக்கினார் அவர். ஆனால், ட்விட்டர் ப்ளூவில் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்ட சில வசதிகளை தங்களால் பயன்படுத்த முடிவில்லை அல்லது தங்களுக்கு அது இயங்கவில்லை எனப் பல ட்விட்டர் பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு விளம்பரங்களே காட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தங்களுக்கு அதிகளவில் விளம்பரங்கள் காட்டப்படுவதாகப் புகாரளித்திருக்கின்றனர். எலான் மஸ்க் ட்விட்டரில் மாற்றங்களைக் கொண்டு வந்த பிறகு அந்நிறுவனத்தின் விளம்பர வருவாய் பெரிதும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.