இந்தியாவில், ஒரே மாதத்தில், 45,000க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்தது ட்விட்டர்
இந்தியாவில், சென்ற ஆண்டு, அக்டோபர் 26 முதல் நவம்பர் 25 வரை, ஒரே மாதத்தில், கிட்டத்தட்ட 45,589 கணக்குகளை தடை செய்துள்ளது, ட்விட்டர் நிறுவனம். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அனுமதியில்லாத தனிநபர் அத்துமீறல் போன்ற காரணங்களுக்காக, இந்த கணக்குகள் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததாக, 3,035 கணக்குகளை நீக்கியுள்ளது . மொத்தத்தில், இந்தியாவில், மேற்கூறிய மாதத்தில் மட்டும், 48,624 கணக்குகளை, ட்விட்டர் தடை செய்ததுள்ளது. இந்தியாவில் இருந்து பெறப்பட்ட புகார்கள் பெரும்பாலானவை, துஷ்பிரயோகம்/துன்புறுத்தல், IP தொடர்பான மீறல்கள், வெறுக்கத்தக்க நடத்தை, மற்றும் தனியுரிமை மீறல் ஆகியவையே ஆகும் எனவும் ட்விட்டர் அறிக்கை கூறுகிறது.
ட்விட்டர் தடை ஒவ்வொரு மாதமும் தொடருமா?
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த, IT விதிகளின் படி, 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள், மாதாந்திர இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும். அதில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிடவேண்டும். அதன்படி, ட்விட்டரின் மாதாந்திர அறிக்கையில், இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து ஒரே சமயத்தில், 755 புகார்களை அதன் குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் பெற்றதாகவும், பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 121 URLகளின், மீது நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளுடன் கூடிய தனிப்பட்ட பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களும், இதில் அடங்கும். ட்விட்டர் அறிக்கையில், கணக்கு இடைநிறுத்தங்கள் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட 22 கணக்குகளுக்கும், பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறியது.