Page Loader
கோடை காலத்தில் லேப்டாப் அதிகமாக சூடாகிறதா? இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்
கோடை காலத்தில் லேப்டாப் அதிகமாக சூடாவதை தவிர்ப்பதற்கான டிப்ஸ்

கோடை காலத்தில் லேப்டாப் அதிகமாக சூடாகிறதா? இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 31, 2025
11:48 am

செய்தி முன்னோட்டம்

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரிக்கும் வெப்பநிலையுடன், மின்னணு சாதனங்கள், குறிப்பாக லேப்டாப்கள் அதிக வெப்பமடைவதற்கு வாய்ப்புள்ளது. இது லேப்டாப்களின் செயல்திறனை பாதிக்கும் மற்றும் கடுமையான சேதத்திற்கு கூட வழிவகுக்கும். சாதனங்கள் தீப்பிடித்தல் அல்லது வெடித்தல் பற்றிய அறிக்கைகள் அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இதனால், லேப்டாப்களின் சீரான செயல்பாட்டை உறுதி செய்ய, வெப்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். அந்த வகையில் கோடைகாலத்தில் அதிக வெப்பத்திலிருந்து லேப்டாப்பை எப்படி தற்காத்துக் கொள்ளலாம் என இதில் பார்க்கலாம்.

வழிகள்

குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கான வழிகள்

லேப்டாப்களை குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு சிறந்த வழி, அவற்றை குளிரூட்டப்பட்ட இடங்களில் பயன்படுத்துவது. அதாவது ஏர் கண்டிஷனிங் உள்ள அறையில் வைத்து பயன்படுத்த வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால், வெளிப்புற ஏர் கூலிங் பேட் பயன்படுத்துவது வெப்பநிலையை சீராக்க உதவும். கூடுதலாக, லேப்டாப்பின் உட்புற பகுதிகளில் குவியும் தூசி மற்றும் அழுக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்வது போன்ற வழக்கமான பராமரிப்பு, அதிக வெப்பமடைவதைத் தடுக்கலாம். படுக்கைகள் அல்லது மடியில் வைத்து பயன்படுத்துவது போன்ற மென்மையான பரப்புகளில் லேப்டாப்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது காற்றோட்டத்தைத் தடுக்கிறது மற்றும் வெப்பத்தை வெளியேற்றாமல் தக்கவைத்துக் கொள்கிறது. அதற்கு பதிலாக, ஒரு மேஜை போன்ற கடினமான மேற்பரப்பில் வேலை செய்வது சரியான காற்றோட்டத்தை அனுமதிக்கிறது.

செய்யக்கூடாதவை

லேப்டாப் பயன்பாட்டில் செய்யக்கூடாதவை

லேப்டாப் சாதன செட்டிங்ஸ்களை மேம்படுத்துவதும் வெப்ப நிலைகளை நிர்வகிக்க உதவும். லேப்டாப்பில் பின்னணியில் இயங்கும் தேவையற்ற ஆப்களை நிறுத்துவது, ஸ்கிரீன் வெளிச்சத்தைக் குறைப்பது மற்றும் பயன்பாட்டில் இல்லாதபோது இணைய இணைப்பை முடக்குவது வெப்பநிலை அதிகரிப்பைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், உற்பத்தியாளர் அங்கீகரித்த சார்ஜரை மட்டுமே பயன்படுத்துவது சாதனம் பாதுகாப்பான வெப்பநிலை வரம்புகளுக்குள் இயங்குவதை உறுதி செய்கிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்களுடைய லேப்டாப்பின் ஆயுளை அதிகரிக்கலாம் மற்றும் கோடை வெப்பத்தால் ஏற்படும் செயல்திறன் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.