புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்ல நாய்.. கைவிட்ட மருத்துவர்கள்! AI மூலம் புதிய தடுப்பூசி கண்டுபிடித்துக் காப்பாற்றிய உரிமையாளர்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் கன்னிங்ஹாம் என்ற தொழில்நுட்பத் தொழில்முனைவோர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி மற்றும் ஆல்பாஃபோல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது செல்ல நாய்க்குத் தனிப்பயனாக்கப்பட்ட 'mRNA' தடுப்பூசியைத் தயாரித்து வியக்க வைத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்ட ரோஸி என்ற நாய்க்கு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கீமோதெரபி போன்ற பாரம்பரிய சிகிச்சைகளுக்காகப் பல ஆயிரம் டாலர்கள் செலவு செய்தும் பலன் கிடைக்கவில்லை. புற்றுநோய் கட்டி சுருங்காத நிலையில், மிஷின் லேர்னிங் துறையில் 17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பால், தானே களத்தில் இறங்கத் தீர்மானித்தார்.
ஏஐ
ஏஐ எப்படி உதவியது?
நாயின் டிஎன்ஏவை வரிசைப்படுத்தி, எப்படி மருந்து தயாரிக்கலாம் என்பதற்கான முழுமையான திட்டத்தை சாட்ஜிபிடி மூலம் பால் உருவாக்கினார். சுமார் 3,000 ஆஸ்திரேலிய டாலர் செலவில் நாயின் ஆரோக்கியமான டிஎன்ஏ மற்றும் புற்றுநோய் பாதித்த டிஎன்ஏ இரண்டையும் ஆய்வு செய்தார். கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தின் ஆல்பாஃபோல்ட் மூலம் புரதங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, எந்தெந்த பிறழ்வுகள் புற்றுநோய்க்குக் காரணம் என்பதைக் கண்டறிந்தார்.
தடுப்பூசி
தடுப்பூசி மற்றும் முடிவு
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவியுடன், ரோஸிக்காக ஒரு பிரத்யேக 'mRNA' தடுப்பூசியைத் தயாரித்தார். இந்தத் தடுப்பூசி நாயின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் ஊசி செலுத்தப்பட்ட பிறகு, நாயின் உடலில் இருந்த புற்றுநோய் கட்டி கணிசமாகச் சுருங்கியுள்ளது. இது முழுமையான குணமளிக்கும் சிகிச்சை இல்லை என்றாலும், ரோஸியின் ஆயுட்காலத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் இது உயர்த்தியுள்ளதாகப் பால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சட்டம்
சட்டச் சிக்கல்கள்
இதைச் சாதாரணமான ஒரு பரிசோதனையாக அவர் செய்யவில்லை. இதற்கான நெறிமுறை அனுமதிகளைப் பெற மூன்று மாதங்கள் கடுமையாக உழைத்து, 100 பக்க ஆவணத்தைத் தயாரித்து முறையான ஒப்புதலுக்குப் பிறகே இந்தச் சிகிச்சையைத் தொடங்கியுள்ளார்.