நிலவில் நாளை சூரிய உதயம்; விக்ரம் லேண்டர் செயல்படும் என்னும் நம்பிக்கையில் இஸ்ரோ
நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் 3 விண்கலத்தினை அனுப்பிவைத்தனர். இந்த விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த மாதம் 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. அதிலிருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டது. இந்நிலையில் அடுத்த 14 நாட்களுக்கு நிலவில் சூரியஒளி இல்லாததால் தேவையான மின்சாரம் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவருக்கு கிடைக்காத நிலையில் அவைகளுக்கு சார்ஜ் போடப்பட்டு ஸ்லீப்பர் மோடில் நிறுத்தி வைத்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து நிலவில் நாளை(செப்.,22) சூரியன் உதயமாகும் என்பதால் சோலார் பேனல்கள் கொண்டு இயக்கப்படும் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயங்க துவங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.
மைனஸ் டிகிரி வெப்பநிலையில் ரோவர் மற்றும் லேண்டர் உறைந்து விடும் என தகவல்
நிலவை பொருத்தமட்டும் 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்படி, நிலவில் சூரிய ஒளி இல்லாத நாட்களில் வெப்பநிலையானது வெகுவாக குறைந்து மைனஸ் 253 டிகிரி வரையில் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலையால் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் முற்றிலுமாக உறைந்துவிடும் என்றும் தெரிகிறது. இத்தகைய சூழலில் நாளை நிலவில் சூரியன் உதயமாகும் பட்சத்தில், மீண்டும் லேண்டர் மற்றும் ரோவரை செயல்பட வைக்கும் சவால் மிகுந்த பணியில் ஈடுபட இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகிறார்கள். இந்த முயற்சி வெற்றிபெற வேண்டுமெனில் சோலார் பேனல்கள், மின்னனு சாதனங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது.