LOADING...
மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ விளம்பரம் வெறும் குமிழிதான்! ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு
ஏஐ முதலீடு குறித்த ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு

மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ விளம்பரம் வெறும் குமிழிதான்! ஐபிஎம் சிஇஓ கருத்துக்கு ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு ஆதரவு

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

உலகெங்கிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக பில்லியன் கணக்கிலான டாலர்களை வாரி இறைத்து வரும் நிலையில், ஜோஹோ நிறுவனம் இந்த ஆபத்தான ஏஐ முதலீட்டு குமிழி போட்டியில் தங்களை இணைத்துக் கொள்ளாது என்று அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்திற்குப் பின்னால் இருக்கும் பொருளாதார நம்பகத்தன்மை குறித்து ஐபிஎம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா எழுப்பியிருந்த சந்தேகங்களுக்கு ஆதரவாகவே ஸ்ரீதர் வேம்பு இக்கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஐபிஎம்

ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணாவின் நியாயமான சந்தேகம்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, ஆர்டிஃபிஷியல் ஜெனரல் இன்டெலிஜென்ஸ் (ஏஜிஐ) என்ற இலக்கை அடைவதற்காகப் பல நிறுவனங்கள் மல்டி-டிரில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்ட ஏஐ தரவு மையங்களை உருவாக்கி வருவதை சுட்டிக்காட்டினார். இவ்வளவு பெரிய முதலீடுகளுக்கு இணையாக லாபத்தை ஈட்டுவது தற்போதைய பொருளாதார சூழலில் சாத்தியமா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். தற்போதைய தொழில்நுட்பங்கள் மட்டுமே ஏஜிஐ இலக்கை அடையப் போதுமானதாக இருக்காது என்றும் அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார்.

ஸ்ரீதர் வேம்பு

எக்ஸ் தளத்தில் ஸ்ரீதர் வேம்பு கொடுத்த பதில்

ஐபிஎம் சிஇஓவின் இந்தக் கருத்தை ஆதரித்து ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மல்டி-டிரில்லியன் டாலர் ஏஐ தரவு மையக் கட்டமைப்பு என்பது ஒரு குமிழி என்று ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா கூறுகிறார். நாங்களும் ஏஐ துறையில் முதலீடு செய்கிறோம். ஆனால், டேட்டா கியூரேஷன், வலுவூட்டல் கற்றல் மற்றும் ஏஐ வெளியீடுகளை சரிபார்க்கும் கம்பைலர் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். இந்த முதலீட்டுக் குமிழியை நோக்கி நாங்கள் ஓட மாட்டோம். இது எங்களது சாதாரண விவேகம் மட்டுமே. சிலருக்கு இது தோல்வி மனப்பான்மையாகத் தோன்றலாம், ஆனால் நாம் 5 ஆண்டுகள் கழித்துப் பேசுவோம்" என்று சவால் விடுத்துள்ளார்.

Advertisement

வேலை நீக்கம்

ஏஐ விளம்பரம் மற்றும் நிறுவனங்களின் வேலைநீக்கப் பின்னணி

ஸ்ரீதர் வேம்பு ஏஐ உலகத்தைக் குறித்து எச்சரிப்பது இது முதல் முறையல்ல. கடந்த சில வாரங்களாகவே, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கக்கூடிய நிஜ உலகப் பயன்களை விட, அதன் மீதான விளம்பரம் மிக அதிகமாக இருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார். குறிப்பாக, பல நிறுவனங்கள் தங்களது பொருளாதார நெருக்கடியால் செய்யும் வேலைநீக்கங்களை, ஏஐ தொழில்நுட்பத்தின் மீது பழிபோட்டு மறைக்க முயல்வதாகவும், தங்களை ஒரு எதிர்காலப் பார்வை கொண்ட தொலைநோக்கு நிறுவனமாக் காட்டிக் கொள்ளவே இவ்வாறு பொய் கூறுவதாகவும் அவர் கடுமையாகக் சாடியுள்ளார்.

Advertisement

உற்பத்தித் திறன்

அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் மென்பொருள் உற்பத்தித் திறன்

அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது இந்த ஏஐ முதலீட்டுக் குமிழியை நம்பியே தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டிருக்கிறது என்றும், ஆனால் இது நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்றும் ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார். ஏஐ கருவிகள் மூலம் மென்பொருள் உருவாக்குபவர்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படுகின்றன. ஆனால் அதற்கான முறையான சான்றுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மாறி வரும் கருத்துக்கள்

உலகளாவிய டெக் தலைவர்களின் மாறிவரும் கருத்துக்கள்

ஸ்ரீதர் வேம்புவின் இந்தக் கருத்துக்கள், உலகளாவிய தொழில்நுட்பத் தலைவர்களின் தற்போதைய மனமாற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன் கூட, ஆரம்பக் கட்ட வைட் காலர் பணியாளர்களின் வேலைகள் ஏஐயால் உடனடியாகப் பறிபோகும் என்று தான் கணித்தது அவ்வளவு வேகமாக நடக்கவில்லை என்பதை அண்மையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் ஆகியோரும், ஏஐ மனிதர்களை முழுமையாக மாற்றுவதற்குப் பதிலாக அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே இருக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement