வலைத்தள எம்பெட் வசதியை தங்கள் சேவையில் அறிமுகப்படுத்திய ஸ்னாப்சாட்
பிற சமூக வலைத்தளங்களுடன் போட்டியிடும் வகையில் தங்களுடைய சேவையில் பிற வலைத்தளங்களை எம்பெட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஸ்னாப்சாட். இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த வசதி ஏற்கனவே இருக்கும் நிலையில், தற்போது ஸ்னாப்சாட்டும் இதனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் ஸ்னாப்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். முதலில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும், அதுவும் ஸ்னாப்சாட்+ பயனாளர்களுக்கு மட்டும் வலைத்தள சேவையை வழங்கி வந்தது ஸ்னாப்சாட். பின்னர், செப்டம்பர் 2022ம் ஆண்டு தங்களது அனைத்து பயனாளர்களுக்கும் வலைத்தள வசதிகளை அறிமுகப்படுத்தியது.
ஸ்னாப்சாட்டின் வருவாய்த் திட்டம்:
ஸ்னாப்சாட்+ என்பது ஸ்னாப்சாட்டின் கட்டண சேவை வசதியாகும். பிற சமூக வலைத்தளங்களைப் போலவே ஸ்னாப்சாட்+ சேவைக்கு சந்தா செய்யும் பயனாளர்களுக்கு, இலவச சேவையைப் பயன்படுத்தும் பயனாளர்களை விட கூடுதல் வசதிகளை விளம்பரமில்லாமல் வழங்கி வருகிறது ஸ்னாப்சாட். 2022ம் ஆண்டு செப்டம்பரிலேயே உலகம் முழுவதும் 5 மில்லியன் ஸ்னாப்சாட்+ பயனாளர்களைப் பெற்றதாக அந்நிறுவனம் அறிவித்த நிலையில், தற்போது 2024ம் ஆண்டிற்குள் 14 மில்லியன் ஸ்னாப்சாட்+ பயனாளர்களைப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது. மேலும், 2024ம் ஆண்டிற்குள் 475 மில்லியன் தினசரி பயனாளர்களைப் பெறவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஸ்னாப்சாட். இதனைத் தவிர, விளம்பர வருவாயின் வளர்ச்சியை 20% ஆக உயர்த்தவும் அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.