சூரிய ஒளியை எரிபொருளாக மாற்றும் புதிய வழிமுறை: விஞ்ஞானிகளின் கணக்கீட்டு முறை வெற்றி!
செய்தி முன்னோட்டம்
விஞ்ஞானிகள் சூரிய ஒளியை நேரடியாக எரிபொருளாக மாற்றக்கூடிய வேதிப்பொருட்களை கண்டறியும் பணியை வேகப்படுத்த, ஒரு சக்திவாய்ந்த புதிய கணக்கீட்டு முறையை உருவாக்கியுள்ளனர். இந்த ஆய்வு 'பாலிஹெப்டாசின் இமைடுகள்' (Polyheptazine imides) எனப்படும் கார்பன் நைட்ரைடு வகை பொருட்களை மையமாகக் கொண்டுள்ளது. இவை சூரிய ஒளியை உறிஞ்சி, அதை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் கார்பன் டை ஆக்சைடு மாற்றத்திற்குப் பயன்படுத்தக்கூடியவை. புதிய வினையூக்கிகளை (Catalysts) ஆய்வகத்தில் ஒவ்வொன்றாகச் செய்து பார்ப்பதற்குப் பதிலாக, கணினி மூலமே எந்த உலோக அயனிகள் (Metal Ions) சிறப்பாகச் செயல்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க இந்த முறை உதவுகிறது.
அறிவியல்
53 உலோக அயனிகள் ஆய்வு:
ஆராய்ச்சியாளர்கள் 53 வெவ்வேறு உலோக அயனிகளை இந்த முறையில் ஆய்வு செய்து, அவை எவ்வாறு வேதிப்பண்புகளை மாற்றுகின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கணக்கீட்டு முறையின் கணிப்புகள், நிஜமான எட்டுப் பொருட்களைக் கொண்டு சோதிக்கப்பட்டபோது மிகத் துல்லியமாக அமைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் தூய்மையான ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி, கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற தொழிற்சாலை வேதிப்பொருட்களைச் சூரிய ஒளி மூலமே தயாரிப்பது எளிதாகும். இது புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக ஒரு பசுமை எரிசக்தி எதிர்காலத்தை உருவாக்க உதவும் ஒரு மைல்கல்லாகும்.