புதிய 'ஸ்மார்ட்டேக் 2' சாதனத்தை இந்தியாவில் வெளியிட்டது சாம்சங்
சாம்சங் நிறுவனமானது தங்களுடைய புதிய 'கேலக்ஸி ஸ்மார்ட்டேக் 2' ட்ராக்கரை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது. புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்டேகின் மேம்பட்ட வடிவமாக வெளியாகியிருக்கிறது ஸ்மார்ட்டேக் 2. ஆப்பிளின் ஏர்டேக்குகளுக்குப் போட்டியாக இந்த ஸ்மார்ட்டேக்குகளை விற்பனை செய்து வருகிறது சாம்சங். நம்முடைய பொருட்கள் தொலைந்தால் எளிதாகக் கண்டறிய உதவும் இந்த ஸ்மார்ட்டேக் 2 சாதனமானது IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் உடன் அறிமுகமாகியிருக்கிறது. முந்தைய மாடலை விட 50% அதிக பேட்டரி லைஃபைக் கொண்டிருக்கிறது புதிய ஸ்மார்ட்டேக் 2. சாதாரணமக 500 நாட்கள் வரையும், பவர் சேவிங் மோடில் 700 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப்பை வழங்குகிறது இந்த ஸ்மார்ட்டேக் 2.
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்டேக் 2: வசதிகள் மற்றும் விலை
காம்பஸ் வ்யூ மற்றும் லாஸ்ட் மோடு ஆகிய இரண்டு வசதிகளை இந்த ஸ்மார்ட்டேக் 2வில் அளித்திருக்கிறது சாம்சங். காம்பஸ் வ்யூ மோடைப் பயன்படுத்தி நம்முடைய தொலைந்த பொருள் எந்த திசையில் இருக்கிறதென வழிகாட்டுகிறது ஸ்மார்ட்டேக் 2. லாஸ்ட் மோடைப் பயன்படுத்தி நம்முடைய தொடர்பு விபரங்களை, தொலைந்த ஸ்மார்ட்டேக் 2வைக் கண்டறிபவர்களுக்கு அளிக்க முடியும். அல்ட்ராவைடு பேண்டைப் (UWB) பயன்படுத்தும் சாம்சங் போன்களுடன் இந்த ஸ்மார்ட்டேக் 2வைப் பயன்படுத்த முடியும். சாம்சங் கேலக்ஸி S20, S21 சீரிஸ்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்களுடனும் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்டேர் 2வை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் ரூ.2,799 என்ற அறிமுக விலையில் வெளியிட்டிருக்கிறது சாம்சங்.